செய்திகள்

இந்தியாவை போல ஓரின சேர்க்கைக்கு அங்கீகாரம் - சிங்கப்பூரில் வலுக்கும் கோரிக்கை

Published On 2018-09-07 10:41 GMT   |   Update On 2018-09-07 11:19 GMT
இந்தியாவை போல் ஓரின சேர்க்கைக்கு அங்கீகாரம் அளிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிங்கப்பூரிலும் கோரிக்கை வலுத்து வருகிறது. #Section377 #SupremeCourt
சிங்கப்பூர்:

இந்தியாவில் இயற்கைக்கு மாறாக ஆண்களோ, பெண்களோ ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது குற்றமாக கருதப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து பல்வேறு தரப்பினரும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இயற்கைக்கு முரணான பாலியல் உறவு தண்டனைக்குரிய குற்றமல்ல என்று கூறியது. மேலும், ஓரினச் சேர்க்கையை குற்றச் செயலாக கருதும் சட்டப்பிரிவு 377-ஐ ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த தீர்ப்பினை வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பாக கருதி, ஓரினச் சேர்க்கையாளர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், இந்தியாவை போல் ஓரின சேர்க்கைக்கு அங்கீகாரம் அளிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிங்கப்பூரிலும் கோரிக்கை வலுத்து வருகிறது.

இதுதொடர்பாக சிங்கப்பூர் தூதர் மற்றும் வக்கீலாக உள்ள டாமி கோ என்பவர் தனது சமூக வலைதளத்தில் கூறுகையில், இந்தியாவை போல் ஓரினச் சேர்க்கைக்கு அங்கீகாரம் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக ஓரினச் சேர்க்கை சமூகத்தினர் சட்டப்பிரிவு 377 ஏ-ஐ எதிர்த்து வழக்கு தொடர வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

மேலும், கடந்த 2016-ம் ஆண்டில் இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கு தோல்வி அடைந்துள்ளது என மற்றொருவர் பதிவிட்டதற்கு, மீண்டும் முயற்சிக்க வேண்டும் என டாமி கோ பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. #Section377 #SupremeCourt
Tags:    

Similar News