செய்திகள்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மறைவுக்கு பாகிஸ்தான் அரசு இரங்கல்

Published On 2018-08-16 16:24 GMT   |   Update On 2018-08-16 16:24 GMT
உடல்நலக்குறைவு காரணமாக இன்று உயிரிழந்த இந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மறைவுக்கு பாகிஸ்தான் அரசு இரங்கல் தெரிவித்துள்ளது. #AtalBihariVajpayee #RIPVajpayee #PakistanGovt
இஸ்லாமாபாத்:

பா.ஜ.க கட்சியின் பிதாமகனும், இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாய் தனது 93-வது வயதில் இன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மிகச்சிறந்த பேச்சாளரும், கவிஞரும், மாபெரும் அரசியல் ஞானம் பெற்ற தலைவருமான இவரது மறைவுக்கு இந்திய நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்பட்டுள்ளது.

இவரது மறைவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் பல்வேறு மாவட்டங்களில் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டதுடன், 7 நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. நாளை முன்னாள் பிரதமருக்கு உரிய மரியாதைகளுடன் இறுதி சடங்கு நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாரத ரத்னா வாஜ்பாயின் மறைவுக்கு பாகிஸ்தான் அரசு இரங்கல் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் அரசு தெரிவித்த இரங்கல் செய்தியில், இந்தியா பாகிஸ்தான் உறவை மேம்படுத்துவதில் இவரது பங்கு மகத்துவமானது என்றும், சார்க் கூட்டமைப்பின் முக்கிய ஆதரவாளர்களில் ஒருவருமான வாஜ்பாயின் மறைவு வருத்தம் அளிப்பதாக தெரிவித்துள்ளது.

மேலும், பாகிஸ்தான் அரசும் மக்களும், வாஜ்பாயை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், இந்திய மக்களுக்கும் தங்களது இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக அந்த இரங்கல் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. #AtalBihariVajpayee #RIPVajpayee #PakistanGovt
Tags:    

Similar News