செய்திகள்

வங்காளதேசம் - போர் குற்றம் தொடர்பான கற்பழிப்பு வழக்கில் 5 பேருக்கு மரண தண்டனை

Published On 2018-08-13 14:46 GMT   |   Update On 2018-08-13 14:46 GMT
வங்காளதேசம் விடுதலை போரின்போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டதுடன் 17 கொலைகள் மற்றும் 15 பெண்களை கற்பழித்த வழக்கில் 5 பேருக்கு இன்று மரண தண்டனை விதிக்கப்பட்டது. #Bangladeshwarcrimes #deathsentence
டாக்கா:

வங்காளதேசத்தில் 1971-ஆம் ஆண்டு, பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த சுதந்திரப் போராட்டத்தின்போது ஒரு தரப்பினர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டதுடன், கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட போர்க்குற்றங்களிலும் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. 

இதைத்தொடர்ந்து, இத்தகைய போர்க்குற்றங்களை விசாரிக்க கடந்த 2010-ம் ஆண்டு போர்குற்ற வழக்குகளை விசாரிக்க சர்வதேச கிரிமினல் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது. இங்கு நடைபெற்றுவரும் வழக்குகளின் விசாரணையில், பலருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

விடுதலை போரின்போது பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி அயூப் கானுக்கு ஆதரவாக செயல்பட்டதுடன் வங்காளதேசத்தின் பட்டுவாகாலி மாவட்டத்துக்கு உட்பட்ட இட்டாபாரியா கிராமத்துக்குள் புகுந்து 17 பேரை கொன்றதாக  (முன்னாள்) பழமை வாத முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த 5 பேர் கடந்த 2015-ம் ஆண்டில் கைது  செய்யப்பட்டனர். 

மேலும், அதே கிராமத்தில் 15 பெண்களை கற்பழித்தது, பொது சொத்துகளை சேதப்படுத்தியது. வீடுகளை எரித்தது, ஆள்கடத்தல், சித்ரவதை செய்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின்கீழ் இவர்கள் வங்காளதேச நீதிமன்றத்தில் இவர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் 5 பேருக்கும் முன்னர் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து மூன்று நீதிபதிகளை கொண்ட சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில் அவர்கள் மேல்முறையீடு செய்தனர். 

இன்று இவ்வழக்கில் தீர்ப்பளித்த தீர்ப்பாயம், ‘போர்குற்றத்தின் ஒரு பகுதியாக இவர்கள் 5 பேரும் பெண்களின் கற்பை சூறையாடுவதை ஒரு ஆயுதமாக பயன்படுத்தியுள்ளனர். இதன் விளைவாக பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களது வாழ்நாள் முழுவதும் இதே மன உளைச்சலுடன் வாழ்ந்துள்ளனர். அவர்களுக்கு நாம் அளிக்க வேண்டிய அங்கீகரமாக இத்தகைய குற்றம் செய்தவர்களுக்கு மரண தண்டனை விதித்தே ஆக வேண்டும்.

எனவேம் குற்றவாளிகள் முஹம்மது இஷாக் ஷிக்தர், அப்துல் கனி, முஹம்மது அவால், சத்தார் படா, சுலைமான் மிருதா ஆகியோரை சாகும்வரை தூக்கிலிட்டு கொல்லுமாறு உத்தரவிடுகிறோம்’ என தெரிவித்துள்ளது. #Bangladeshwarcrimes #deathsentence
Tags:    

Similar News