செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ வீரர்களுக்கு போர் பயிற்சி அளிக்கும் திட்டத்தை நிறுத்தியது அமெரிக்கா

Published On 2018-08-11 13:33 GMT   |   Update On 2018-08-11 13:33 GMT
அமெரிக்காவில் பாகிஸ்தான் ராணுவ வீரர்களுக்கு போர் பயிற்சி அளித்துவரும் திட்டத்துக்கு டிரம்ப் அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. #UScutsmilitarytraining #UScutstrainingprog
வாஷிங்டன்:

அமெரிக்காவின் மிகப்பெரிய ராணுவ கூட்டாளியாக இந்தியாவை அமெரிக்க அரசு கடந்த 2016-ம் ஆண்டில் அறிவித்தது.

இந்நிலையில், அந்நாட்டின் தேசிய பாதுகாப்புத்துறை அங்கீகார மசோதாவுக்கு(2019) ஒப்புதல் அளிக்க அமெரிக்க பாராளுமன்ற மேல்சபையில் கடந்த 18-6-2018 அன்று வாக்கெடுப்பு நடந்தது. 71 ஆயிரத்து 600 கோடி டாலர்கள் மதிப்பிலான இந்த மசோதாவை ஆதரித்து 85 உறுப்பினர்களும், எதிராக 10 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

பாராளுமன்ற காங்கிரஸ் சபையிலும் இரு சபைகளின் கூட்டுக் குழுவிலும் ஒப்புதல் பெற்று அதிபர் டொனால்ட் டிரம்ப் கையொப்பமிட்டதும் சட்டவடிவம் பெறும் இந்த மசோதாவில் அமெரிக்காவின் மிகப்பெரிய ராணுவ கூட்டாளியான இந்தியாவுடனான ராணுவ உறவுகளை பலப்படுத்தும் பல சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

இதற்கிடையில், ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பாகிஸ்தான் அரசுக்கு அளித்துவந்த உள்நாட்டு பாதுகாப்பு நிதியை ரத்து செய்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவு பிறப்பித்தார்.

எனினும், அமெரிக்க அரசின் சார்பில் நடத்தப்படும் சர்வதேச ராணுவ பயிற்சி பள்ளியில் பாகிஸ்தானை சேர்ந்த ராணுவ வீரர்களுக்கு போர் பயிற்சி அளிக்கும் திட்டம் கைவிடப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டிருந்தது.

அமெரிக்காவில் கடந்த 1960-ம் ஆண்டில் இருந்து இயங்கிவரும் இந்த சர்வதேச ராணுவ பயிற்சி பள்ளியில் வழக்கமாக ஆள்சேர்ப்பின்போது பாகிஸ்தானை சேர்ந்த 66 வீரர்களுக்கு இடம் அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அடுத்த ஆண்டில் நடைபெறும் ஆள்சேர்ப்பில் பாகிஸ்தான் வீரர்கள் பயிற்சி பெறுவதற்கு நிதி அளிக்க டிரம்ப் அரசு மறுத்து விட்டதாக தெரியவந்துள்ளது.

பாகிஸ்தானுக்கு முன்னர் ஒதுக்கப்பட்ட 66 இடங்களை வேறு நாட்டினருக்கு வழங்க அமெரிக்க ராணுவ தலைமையக அதிகாரிகள் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை பாகிஸ்தான் நாட்டின் பிரபல நாளிதழும் உறுதிப்படுத்தியுள்ளது. 

பாகிஸ்தான் முன்னாள் ராணுவ தளபதியும், அதிபருமான பர்வேஸ் முஷரப், பாகிஸ்தான் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ. தலைவர் நவீத் முக்தார் உள்ளிட்ட பலர் அமெரிக்க அரசின் சார்பில் நடத்தப்படும் இந்த சர்வதேச ராணுவ பயிற்சி பள்ளியின் முன்னாள் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. #UScutsmilitarytraining #UScutstrainingprog 
Tags:    

Similar News