செய்திகள்

பாகிஸ்தான் பாராளுமன்றம் 13-ம் தேதி கூடுகிறது - பிரதமராக இம்ரான் கான் 18-ம் தேதி பதவி ஏற்பு

Published On 2018-08-10 14:59 GMT   |   Update On 2018-08-10 14:59 GMT
பாகிஸ்தான் நாட்டின் பாராளுமன்றம் வரும் 13-ம் தேதி கூடுகிறது. அன்றைய தினம் புதிதாக தேர்வான எம்.பி.க்கள் பதவி ஏற்கின்றனர். பிரதமராக இம்ரான் கான் 18-ம் தேதி பதவி ஏற்று கொள்கிறார். #ImranKhan #ImranKhanswearingin
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் பாராளுன்றத்துக்கு கடந்த 25-ம் தேதி நடந்த தேர்தலில் 116 தொகுதிகளில் இம்ரான் கானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி வெற்றி பெற்றது. முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி 64 தொகுதிகளிலும், மறைந்த முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகன் பிலாவல் பூட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி 43 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

முத்தாஹிதா மஜ்லிஸ் அமல் வேட்பாளர்கள் 12 இடங்களிலும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (காயிதே ஆஸம் பிரிவு), பலூசிஸ்தான் தேசிய கட்சி, பாகிஸ்தான் முத்தாஹிதா குவாமி இயக்கம், பலூசிஸ்தான் அவாமி கட்சி, அவாமி தேசிய கட்சி, அவாமி முஸ்லிம்  லீக், பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சானியத் மற்றும் ஜம்ஹூரி வட்டான் ஆகிய கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் தலா ஒரு இடங்களில் வென்றுள்ளனர். ஆக உதிரி கட்சிகளிடம் தற்போது 20 எம்.பி.க்கள் உள்ளனர். இதுதவிர 14 தொகுதிகளில் சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

பாகிஸ்தானில் ஆட்சி அமைக்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 137 எம்.பி.க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், இந்த தேர்தலில் போதிய பெரும்பான்மையை எந்த கட்சியும் பெறவில்லை. 116 உறுப்பினர்களுடன் அதிக இடங்களை பெற்ற கட்சி என்ற வகையில் கூட்டணி அரசு அமைக்க இம்ரான் கான் கடந்த இருநாட்களாக சில தலைவர்கள் மற்றும் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்ற எம்.பி.க்களுடன் மும்முரமாக பேசி வருகிறார்.    

இந்நிலையில்,  புதிதாக தேர்வான உறுப்பினர்களுடன் பாகிஸ்தான் 15-வது பாராளுமன்றத்தின் முதல் கூட்டம் வரும் 13-ம் தேதி கூடுகிறது. 

அன்றைய தினம் புதிய உறுப்பினர்கள் பதவி ஏற்று கொள்கின்றனர். வரும் 14-ம் தேதி அந்நாட்டின் சுதந்திர தினத்துக்கு பின்னர்,  பிரதமராக இம்ரான் கான் 18-ம் தேதி பதவி ஏற்று கொள்வார் என தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி தலைமையகம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #ImranKhan #ImranKhanswearingin  
Tags:    

Similar News