செய்திகள்

உஸ்பெகிஸ்தானில் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரிக்கு சுஷ்மா மரியாதை செலுத்தினார்

Published On 2018-08-05 10:57 GMT   |   Update On 2018-08-05 10:57 GMT
அரசுமுறை பயணமாக இன்று உஸ்பெகிஸ்தான் வந்த வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தாஷ்கென்ட் நகரில் மரணம் அடைந்த முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரிக்கு மரியாதை செலுத்தினார்.
தாஷ்கென்ட்:

மத்திய ஆசிய நாடுகளான கஜகஸ்தான், கிர்கிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளில் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் 4 நாள் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்த பயணத்தின் நிறைவுகட்டமாக நேற்று உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கண்ட் வந்தடைந்த அவரை விமான நிலையத்தில் உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி அப்துல் அஜிஸ் காமிலோவ் மலர்கொத்து அளித்து அன்புடன் வரவேற்றார்.

பல்வேறு துறைகளில் இந்தியா - உஸ்பெகிஸ்தான் இடையிலான உறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக இரு தலைவர்களும் உயரதிகாரிகள் குழுவினருடன் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக்கு பின்னர் உஸ்பெகிஸ்தான் பிரதமர் அப்துல்லா அரிப்போவ்-ஐ சுஷ்மா சந்தித்து பேசினார்.

சுதந்திர போராட்ட தியாகியும் இந்தியாவின் இரண்டாவது பிரதமருமான லால் பகதூர் சாஸ்திரி இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தம் செய்வதற்காக கடந்த 1966-ம் ஆண்டு உஸ்பெகிஸ்தான் தலைநகரான தாஷ்கென்ட் நகருக்கு வந்திருந்தார்.

10-1-1966 அன்று வரலாற்று சிறப்புமிக்க இந்தியா-பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தம் கையொப்பமானது. அதற்கு மறுநாள் 11-1-1966 அன்று லால் பகதூர் சாஸ்திரி(61) மாரடைப்பால் லால் பகதூர் சாஸ்திரி மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. எனினும், அவரது மரணம் இயற்கையானது அல்ல, அமெரிக்க உளவுத்துறையின் கைவரிசையாக இருக்கலாம் என அப்போது பரவலாக ஒரு கருத்து நிலவியது.


மறைந்த லால் பகதூர் சாஸ்திரிக்கு அவரது உயிர் பிரிந்த தாஷ்கென்ட் நகரில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நினைவிடத்துக்கு இன்று சென்ற மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ், லால் பகதூர் சாஸ்திரியின் மார்பளவு சிலைக்கு மலர்வளையம் சமர்ப்பித்து மரியாதை செலுத்தினார்.

அந்த சிலையை வடிவமைத்த சிற்பி யாக்கோவ் ஷப்பிரி என்பவர் சுஷ்மாவுடன் நின்று புகைப்படம் எடுத்து கொண்டார்.
Tags:    

Similar News