செய்திகள்

பதவி ஏற்பு விழா- மோடிக்கு இம்ரான்கான் அழைப்பு?

Published On 2018-07-28 06:32 GMT   |   Update On 2018-07-28 06:32 GMT
தனது பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க இந்திய பிரதமர் நரேந்திர மோடியை இம்ரான்கான் அழைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. #Imrankhan #Modi
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் பாராளுமன்றத்துக்கு கடந்த 25-ந்தேதி தேர்தல் நடந்தது. மொத்தம் 342 இடங்கள் உள்ளன. இதில் 272 உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தேர்ந்து எடுக்கப்படுகிறாகள். இதில் 270 தொகுதிகளில் தேர்தல் நடந்தது. 136 தொகுதியை பெறும் கட்சி ஆட்சி அமைக்க முடியும்.

இதில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் - இ- இன்சாப் (பி.டி.ஐ.) அதிக இடங்களில் வெற்றி பெற்று தனி பெரும் கட்சியாக திகழ்கிறது. அந்த கட்சிக்கு 117 இடங்கள் கிடைத்துள்ளது.

முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப்பின் முஸ்லிம் லீக் 64 இடங்களிலும், பிலாவல்பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 43 இடங்களிலும் வெற்றி பெற்று உள்ளன. மீதியுள்ள 67 தொகுதிகளை இதர சிறிய கட்சிகளும், சுயேட்சைகளும் கைப்பற்றியுள்ளன.

இம்ரான்கானின் கட்சி பாகிஸ்தானில் புதிய அரசை அமைப்பது உறுதியாகி விட்டது. சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சைகளின் ஆதரவுடன் இம்ரான்கான் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைகிறது. விரைவில் அவர் பிரதமராக பதவி ஏற்கிறார்.

4 மாகாண தேர்தல்களில் பஞ்சாப் மாகாணத்தில் இம்ரான்கான் கட்சிக்கும், நவாஸ் செரீப் கட்சிக்கும் இடையே ஆட்சி அமைப்பதில் இழுபறி நிலவுகிறது. சிந்து மாகாண பாகிஸ்தான் மக்கள் கட்சியும், பலுசிஸ்தானில் அவாமி கூட்டணி கட்சியும் ஆட்சி அமைக்கின்றன. கைபர்-பக்துன்கவா மாகாணத்தில் இம்ரான்கான் கட்சி மொத்தம் உள்ள 96 தொகுதிகளில் 66 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கிறது.

இந்த நிலையில் தனது பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க இந்திய பிரதமர் நரேந்திர மோடியை இம்ரான்கான் அழைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பல்வேறு வி‌ஷயங்களில் அவருடன் பேசுவதற்காக பதவி ஏற்பு விழாவுக்கு அழைக்க அவர் முடிவு செய்து இருப்பதாகவும் அந்த தகவல் தெரிவிக்கின்றன. #Imrankhan #Modi
Tags:    

Similar News