செய்திகள்

ரஷிய உளவாளியாக நடித்த பெண் அமெரிக்காவில் கைது

Published On 2018-07-17 11:37 GMT   |   Update On 2018-07-17 11:37 GMT
அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரத்துக்கு ஆதரவான அமைப்பினருடன் தொடர்புகளை ஏற்படுத்தி, ரஷிய உளவாளியாக நடித்த பெண்ணை வாஷிங்டன் போலீசார் கைது செய்தனர்.
வாஷிங்டன்:

ரஷியா நாட்டை சேர்ந்தவர் மரியா புட்டினா(29). அமெரிக்காவுக்கு வந்து அமெரிக்க பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த மரியா, ரஷியா நாட்டின் துப்பாக்கி வைத்திருக்கும் உரிமைகளுக்காக போராடும் அமைப்பின் நிறுவனராகவும் உள்ளார்.

இந்நிலையில், வாஷிங்டன் மற்றும் நியூயார்க் நகரில் அமெரிக்க அரசியல் பிரமுகர்கள் மற்றும் அரசு உயரதிகாரிகளுக்கு மிகப்பெரிய விருந்து நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து, மெல்லமெல்ல பிரபலமடைந்த மரியா, தன்னை ரஷிய அரசின் உளவாளியாக சிலரிடம் அறிமுகம் செய்துகொண்டார்.

பல்வேறு பிரபலங்களுடன் இருக்கும் புகைப்படங்களை தனது பேஸ்புக் பக்கத்தில் அடிக்கடி பதிவிட்டு வந்த மரியா, அமெரிக்க அரசின் நிதித்துறை அமைச்சகத்தின்கீழ் இயங்கிவரும் வெளிநாட்டு  சொத்துகள் கட்டுப்பாட்டு துறையால் தடைவிதிக்கப்பட்ட அலெக்ஸான்டர் டோர்ஷின் என்பவருடன் மிகவும் நெருக்கமாக இருந்துள்ளார்.


ரஷியா மத்திய வங்கியின் துணைத் தலைவரான அலெக்ஸான்டர் டோர்ஷின் ஆலோசனைப்படியும், அவரது திட்டப்படி அதிகாரத்தில் உள்ள சிலரை வளைத்துப்போட்டு அமெரிக்க அரசின் தேசிய முடிவுகளில் தலையீடு செய்யவும், குறிப்பாக, அமெரிக்க அரசின் துப்பாக்கி கட்டுப்பாட்டு சட்டத்தை தளர்த்தவும் மரியா புட்டினா முயன்று வந்துள்ளார்.

இவரது நடவடிக்கைகளை மோப்பம் பிடித்த அமெரிக்க உளவுப்படையினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவரை கைது செய்தனர். நாளை (புதன்கிழமை) அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்.

அலெக்ஸான்டர் டோர்ஷின் மட்டுமின்றி மரியாவுடன் அமெரிக்காவை சேர்ந்த இருவருடனும், துப்பாக்கி கட்டுப்பாட்டு சட்டத்துக்கு எதிரான அமைப்பினருடனும் தொடர்பு இருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. #Russianwomanarrested #actingasRussianagent
Tags:    

Similar News