செய்திகள்

நவாஸ் ஷரீப்புக்கு தண்டனை விதித்த நீதிபதி மற்ற வழக்கு விசாரணையில் இருந்து விலகல்

Published On 2018-07-17 08:54 GMT   |   Update On 2018-07-17 08:54 GMT
ஊழல் வழக்கில் நவாஸ் ஷரீப் மற்றும் அவரது மகளுக்கு சிறை தண்டனை விதித்த நீதிபதி, நவாஸ் மீதான மற்ற இரு வழக்கு விசாரணையில் இருந்து திடீரென விலகியுள்ளார். #NawazSharif
இஸ்லாமாபாத்:

லண்டன் அவன்பீல்ட் குடியிருப்பு தொடர்பான ஊழல் வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப், 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட அவரது மகள் மரியம் நவாஸ் மற்றும் ஓராண்டு தண்டனை விதிக்கப்பட்ட மருமகன் சப்தர் ஆகியோர் ராவல்பிண்டி நகரில் உள்ள அடிடாலா சிறையில் தற்போது அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

ஊழல் வழக்கில் பாகிஸ்தான் பொறுப்புடைமை நீதிமன்றம் விதித்த தண்டனையை எதிர்த்து சிறையில் இருக்கும் மூன்று பேரின் சார்பிலும் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் அப்பீல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 

தேசிய பொறுப்புடைமை நீதிமன்றம் விதித்த சிறை தண்டனையை ரத்து செய்ய வேண்டும். நவாஸ் ஷரிப் மீதுள்ள மேலும் இரு ஊழல் வழக்குகளின் விசாரணையை அடிடாலா சிறை வளாகத்தில் நடத்த பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும். 

நிலுவையில் இருக்கும் மேலும் இரு ஊழல் வழக்குகளை தற்போதைய பொறுப்புடைமை நீதிமன்ற நீதிபதி முஜம்மது பஷீர் விசாரிக்க கூடாது. ஏற்கனவே, இந்த வழக்குகளின் சாதக-பாதகங்கள் பற்றி அவர் வெளிப்படையாக பொதுவெளியில் விமர்சித்துள்ளதால் முஹம்மது பஷீருக்கு வேறு நீதிபதியிடம் இந்த விசாரணையை ஒப்படைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளுடன் நவாஸ் ஷரிப், மரியம் நவாஸ் மற்றும் அவரது கணவர் சப்தர் சார்பில் நேற்று 7 முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று நடக்க உள்ள நிலையில், தேசிய பொறுப்புடமை நீதிமன்ற நீதிபதி முஜம்மது பஷீர், நவாஸ் ஷெரீப் மீதான மற்ற இரு வழக்குகளையும் விசாரிக்கும் பொறுப்பில் இருந்து விலகியுள்ளார். 

இந்த விலகல் முடிவு தொடர்பாக இஸ்லாமாபாத் ஐகோர்ட் தலைமை நீதிபதிக்கு பஷீர் எழுதியுள்ள கடிதத்தில், நவாஸ் மீதான மற்ற இரு வழக்குகளை விசாரிக்கும் பொறுப்பை வேறு நீதிபதிக்கு மாற்றுவதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News