செய்திகள்

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பேராயருக்கு ஓராண்டு தண்டனை

Published On 2018-07-03 16:08 IST   |   Update On 2018-07-03 16:08:00 IST
ஆஸ்திரேலியாவில் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியாருக்கு உதவியதாக பேராயருக்கு ஓராண்டு தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. #Australia
கான்பெர்ரா:

ஆஸ்திரேலியா நாட்டில் கடந்த 1976-ம் ஆண்டு கிறிஸ்தவ பாதிரியாராக பணிபுரிந்து வந்த ஜேம்ஸ் பேட்ரிக் பிளெட்சர் அங்கு ஊழியம் செய்யும் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது. இந்த புகார் கடந்த 2004-ம் ஆண்டு விசாரிக்கப்பட்டு பாதிரியார் ஜேம்ஸ் பேட்ரிக் பிளெட்சருக்கு தண்டனை அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, சிறுவர்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்த விவகாரத்தை மறைத்து அவருக்கு உதவியதாக பேராயர் பிலிப் வில்சன் மீதும் புகார் அளிக்கப்பட்டது.

இவர் அப்போது பாதிரியாராக இருந்த போது, ஜேம்ஸ் பேட்ரிக் பிளெட்சரின் தொந்தரவுகள் குறித்து தாங்கள் இவரிடம் புகார் அளித்ததாகவும், ஆனால், தேவாலயத்தின் பெயர் கெட்டுப்போகும் என்பதால் அதனை பிலிப் வில்சன் மறைத்துவிட்டு, எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இதுதொடர்பான வழக்கு விசாரணையில், பேராயர் வில்சன் குற்றவாளி என கடந்த மாதம் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவரது முதுமையை காரணம் காட்டி வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும் அவரது வக்கீல் கோரிக்கை விடுத்திருந்தார்.

ஆனால் அவரது கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிமன்றம், இன்று பேராயருக்கான தண்டனையை அறிவித்தது. அதன்படி, 12 மாதங்கள் அவரை வீட்டுக்காவலில் வைக்க வேண்டும் எனவும், 6 மாதங்களுக்கு பிறகு அவர் பரோலுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. #Australia
Tags:    

Similar News