செய்திகள்
கண்களாகவும், காதுகளாகவும் நண்பன் - உலகக்கோப்பை போட்டியில் ஒரு உணர்ச்சிகர நிகழ்வு- வீடியோ
கேட்கும் திறன் மற்றும் பார்வை இல்லாத நபர் நண்பரின் உதவியால் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் தனது நாட்டு அணியின் வெற்றியை கொண்டாடிய நெகிழ்ச்சி நிகழ்வு நடந்துள்ளது. #FIFA #WorldCup
போகோடா:
உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷியாவில் நடந்து வருகின்றது. கடந்த வாரம் நடந்த குரூப் போட்டியில் கொலம்பியா - போலந்து அணிகள் மோதின. இந்த போட்டியில், கொலம்பியா அணி 3-0 என்ற கணக்கில் வென்றது. இந்நிலையில், இந்த போட்டி நடந்த அன்று கொலம்பியா தலைநகரில் நடந்த ஒரு உணர்ச்சிமிகு நிகழ்வு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கொலம்பியா அணியின் தீவிர ரசிகரான ஜோஸ் ரிச்சர்ட், 9 வயதில் தனது பார்வை மற்றும் கேட்கும் திறனை இழந்தவர். போட்டி நடந்த அன்று போகோடா நகரில் உள்ள கிளப்பில் ஆஜரான ஜோஸுக்கு அவரது நண்பர் போட்டியை டிவி.யில் பார்த்து விளக்கியுள்ளார். கால்பந்து மைதானம் போன்ற சிறிய அட்டையை மடிப்பகுதியில் வைத்து, ஜோஸின் இரு கைகளையும் பிடித்து அவரது நண்பர், பந்து போகும் திசையை சுட்டிக்காட்டி விளக்கியுள்ளார்.
பவுல், பெனால்டி, கோல் என ஒவ்வொரு நிகழ்வுக்கும் சிறப்பு சங்கேத சைகைகள் மூலம் ஜோஸின் நண்பர் விவரித்துள்ளார். கொலம்பியா அணி கோல் அடித்ததும் உணர்ச்சி பெருக்கால் ஜோஸ் கூச்சலிடும் காட்சிகள் நெகிழ வைக்கின்றன. வீடியோ கீழே..