செய்திகள்

அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பதவிக்கு இந்தியர்? - டிரம்ப் பரிசீலனை

Published On 2018-06-28 18:48 GMT   |   Update On 2018-06-28 18:48 GMT
அமெரிக்காவில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக பதவி வகித்த அந்தோணி கென்னடி ஓய்வு பெறுவதையடுத்து, அவருடைய இடத்துக்கு புதிய நீதிபதியை நியமிக்கும் பணியில் டிரம்ப் தீவிரமாக இறங்கி உள்ளார். #Justice #AnthonyKennedy
வாஷிங்டன்:

அமெரிக்காவில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக பதவி வகித்து வருபவர் அந்தோணி கென்னடி (வயது 81). இவர் அடுத்தமாதம் (ஜூலை) 31-ந் தேதி, தான் பணியில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று முன்தினம் அறிவித்தார்.

இது தொடர்பாக அவர் ஜனாதிபதி டிரம்பை, வெள்ளை மாளிகையில் சந்தித்து தன்னுடைய முடிவை தெரிவித்தார். அந்தோணி கென்னடி ஓய்வு பெறுவதையடுத்து, அவருடைய இடத்துக்கு புதிய நீதிபதியை நியமிக்கும் பணியில் டிரம்ப் தீவிரமாக இறங்கி உள்ளார்.

இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பதவிக்கு, 25 நீதிபதிகளின் பெயர்களை டிரம்ப் பட்டியலிட்டு இருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் நேற்று செய்தி வெளியிட்டன. இந்த பட்டியலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த நீதிபதி அமுல் தாபர் பெயரும் இடம்பெற்று இருப்பது தெரியவந்துள்ளது.

அமுல் தாபர், கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்காவின் 6-வது மேல்முறையீட்டு கோர்ட்டின் நீதிபதியாக டிரம்பால் நியமனம் செய்யப்பட்டவர் ஆவார். அதன் மூலம் அமெரிக்காவில் மேல்முறையீட்டு கோர்ட்டின் நீதிபதியான முதல் தெற்கு ஆசிய வம்சாவளி என்கிற பெயரை அவர் பெற்றார்.

இந்தியாவில் இருந்து சென்று அமெரிக்காவில் குடியேறிய தம்பதியின் மகனான அமுல் தாபர், 1991-ம் ஆண்டு பாஸ்டன் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார். அதன் பின்னர் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் சட்ட மேற்படிப்பை முடித்தார். இவர் கென்டக்கி மாகாணத்தில் உள்ள மாவட்ட கோர்ட்டில் வக்கீலாகவும், நீதிபதியாகவும் பணியாற்றி உள்ளார்.

கடந்த ஆண்டு அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் காலியாக இருந்த நீதிபதி பதவிக்கு அமுல் தாபர் பெயர் பரிசீலிக்கப்பட்டதும், இதற்காக டிரம்ப் அவரிடம் நேர்காணல் நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.  #Justice #AnthonyKennedy #tamilnews
Tags:    

Similar News