செய்திகள்

அரசியலுக்கு முழுக்கா? பர்வேஸ் முஷாரப், வீடியோவில் விளக்கம்

Published On 2018-06-23 18:36 GMT   |   Update On 2018-06-23 18:36 GMT
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் தனது அரசியல் பயணத்தை குறித்து விளக்கம் அளிக்கிற வகையில் வீடியோவில் செய்தி விடுத்து உள்ளார். #Musharraf
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப், தற்போது துபாயில் உள்ளார்.

இந்த நிலையில், அவர் அனைத்து பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (ஏ.பி.எம்.எல்.) கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகினார். இது குறித்த தகவலை வெளியிட்ட அந்தக் கட்சியின் புதிய தலைவர் முகமது அம்ஜத். அரசியலில் இருந்து வாழ்நாள் முழுவதும் தடை செய்து பெஷாவர் ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை அடுத்து முஷரப் பதவி விலகி உள்ளதாக கூறி இருந்தார். இதையடுத்து முஷரப் அரசியலுக்கு முழுக்கு போட்டு விட்டாரோ என்று யூகங்கள் எழுந்தன.

இதற்கு விளக்கம் அளிக்கிற வகையில் முஷரப், வீடியோவில் செய்தி விடுத்து உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிட திட்டமிட்டேன். ஆனால் பாகிஸ்தானுக்கு திரும்பி வந்தால் கைது செய்யமாட்டோம், வாழ்நாள் தகுதிநீக்க உத்தரவை விலக்கிக்கொள்வோம், வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டோர் பட்டியலில் இருந்து (முஷரப்) பெயர் நீக்கப்படும் என்பதுபோன்ற வாக்குறுதிகளை விரும்பினேன்.

கவாஜா ஆசிப்பின் வாழ்நாள் தகுதி நீக்க உத்தரவு ரத்தாகிறபோது, எனக்கு விதிக்கப்பட்ட தடையை ஏன் ரத்து செய்யக்கூடாது? நவாஸ் ஷெரீப் நாட்டை விட்டு செல்லலாம், திரும்ப வரலாம் என்று இருக்கிறபோது எனக்கு அந்த உரிமை கிடையாதா?

நான் விரும்பிய வாக்குறுதிகள் அளிக்கப்படவில்லை. எனது கட்சிக்காக நான் எதுவும் செய்ய முடியாது என்பதை தெரிந்து கொண்டேன். எனவே கட்சித்தலைவர்களுடன் கலந்தாலோசனை செய்து விட்டு நாட்டுக்கு திரும்புவதில்லை என்று முடிவு எடுத்தேன்.

சட்டப்பிரச்சினைகளால்தான் இந்த முடிவை எடுத்தேன். நான் தொடங்கிய கட்சியை ஆதரிப்பேன். எதிர்கால நடவடிக்கை குறித்து பின்னர் நிலைமையைப் பொறுத்து முடிவு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார். இதன் மூலம் அவர் அரசியலுக்கு முழுக்கு போடவில்லை என்பதை சூசகமாக உணர்த்தி உள்ளார். 
Tags:    

Similar News