செய்திகள்

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க சீனா சென்றார் மோடி

Published On 2018-06-09 08:20 GMT   |   Update On 2018-06-09 08:20 GMT
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று பிற்பகல் சீனா சென்றடைந்தார். எல்லை தாண்டும் பயங்கரவாதம் குறித்து மாநாட்டில் அவர் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. #SCOsummit #ModiInChina
புதுடெல்லி:

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு ஆண்டுதோறும் மாநாடு நடத்தி வருகிறது. இந்த அமைப்பில் ரஷ்யா, சீனா, பாகிஸ்தான் உள்பட பல்வேறு நாடுகள் அங்கம் வகிக்கின்றன. கடந்த ஆண்டு இந்த அமைப்பில் இந்தியாவும் தன்னை ஒரு உறுப்பினராக இணைத்துக் கொண்டது.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு சீனாவில் இன்றும், நாளையும் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் சுமார் 18 நாட்டு தலைவர்கள் கலந்து கொண்டு பேச உள்ளனர்.

இந்த மாநாட்டில் இந்தியா முதல் முறையாக இந்த ஆண்டுதான் கலந்து கொள்கிறது. இந்தியாவை போன்றே பாகிஸ்தானும் இந்த அமைப்பில் கடந்த ஆண்டுதான் உறுப்பினரானதால் அந்த நாடும் இப்போதுதான் முதல் முறையாக கலந்து கொள்கிறது.

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இன்று காலை தனி விமானத்தில் சீனா புறப்பட்டார். டெல்லி விமான நிலையத்தில் அவரை மத்திய மந்திரிகள், உயர் அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர். மதியம் சீனா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு அங்கு கிங்டாவ் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.



பிரதமர் மோடி கடந்த ஒரு மாத கால இடைவெளியில் தற்போது 2-வது முறையாக சீனா சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது. ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேச உள்ளார். அவர் எல்லை தாண்டும்  பயங்கரவாதம் பற்றி பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பயணத்தின் போது சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதின் ஆகியோரையும் பிரதமர் மோடி சந்தித்து பேச உள்ளார். #SCOsummit #ModiInChina
Tags:    

Similar News