செய்திகள்

16 பேரை பலி வாங்கிய பாக்தாத் ஆயுதக்கிடங்கு - பாதுகாப்பு படை தீவிர விசாரணை

Published On 2018-06-07 05:21 GMT   |   Update On 2018-06-07 05:21 GMT
ஈராக்கின் பாக்தாத் நகரில் ஆயுதக்கிடங்கு வெடித்து சிதறியதில் உயிரிழப்பு 16 ஆக உயர்ந்துள்ள நிலையில், ஆயுதங்களை பதுக்கி வைத்தது யார்? என்பது குறித்து பாதுகாப்பு படையினர் விசாரித்து வருகின்றனர். #BaghdadBlast
பாக்தாத்:

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமைந்துள்ள சதர் நகரில் ஒரு குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் இன்று அதிகாலை திடீரென வெடித்துச் சிதறின. இதில், ஆயுதங்கள் வைத்திருந்த கட்டிடம் இடிந்து விழுந்தது. அக்கம் பக்கத்தில் உள்ள கட்டிடங்களும் பாதிக்கப்பட்டன.

இந்த விபத்தில் ஏராளமானோர் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தனர். சிலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 7 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகின. பின்னர் காயமடைந்தவர்களில் மேலும் சிலர் உயிரிழந்தனர். இதையடுத்து உயிரிழப்பு 16 ஆக அதிகரித்தது. 32 பேர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.



ஆயுதக் குழுவினர் தங்களுக்கு சொந்தமான கையெறி குண்டுகள், ராக்கெட் மூலம் ஏவப்படும் குண்டுகள் மற்றும் வெடி மருந்துகள் உள்ளிட்ட கனரக ஆயுதங்களை அதிக அளவில் சேமித்து வைத்திருந்ததால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இவ்வளவு சக்திவாய்ந்த ஆயுதங்களை பதுக்கி வைத்தது யார்? என்பது குறித்து பாதுகாப்பு படையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

விபத்து நடந்த பகுதியில் முழு வீச்சில் மீட்பு பணிகள் நடைபெற்றன. மேலும் அசம்பாவிதங்கள் ஏற்படாத வண்ணம் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. #BaghdadBlast
Tags:    

Similar News