செய்திகள்

சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசருக்கு அல்கொய்தா எச்சரிக்கை

Published On 2018-06-03 22:39 GMT   |   Update On 2018-06-03 22:39 GMT
பெண்களின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் சவுதி அரேபிய இளவரசருக்கு அல்கொய்தா பயங்கரவாத அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. #AlQaedaWarning #Saudicrownprince #MohammedbinSalman

துபாய்:

சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரான முகமது பின் சல்மான் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். குறிப்பாக பெண்களின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பெண்கள் கார் ஓட்ட அனுமதி அளிப்பது, விளையாட்டு மைதானங்களுக்குள் அனுமதி, திரையரங்குகளுக்கு அனுமதி உட்பட பல சட்டங்கள் இயற்றப்பட்டன.

பெண்களுக்கு எதிரான பாலியல் ரீதியான துன்புறுத்தல் செய்யும் நபர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், 3 லட்சம் ரியால்கள் அபராதமும் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அமைச்சரவையும் ஒப்பதல் அளித்துள்ளதாக அரசு செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டது. மேலும் சவுதி பெண்கள் சொந்தமாக தொழில் துவங்கலாம் எனவும் சவுதி அரசு தெரிவித்துள்ளது.

சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அந்நாட்டில் பொழுதுபோக்கு நகரம் ஒன்றையும் உருவாக்க இருக்கிறார். இந்த நகரம் குட்டி நியூயார்க், சிங்கப்பூர், மலேசியா போல இருக்கும் என்று கூறப்படுகிறது.
 
இந்நிலையில், சவுதி அரேபியாவின் இந்த முடிவுக்கு அல்கொய்தா பயங்கரவாத அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சவுதி இளவரசர் பெண்களுக்கு தேவையில்லாத சுதந்திரம் கொடுக்கிறார், மேற்கத்திய கலாச்சாரத்தை புகுத்தி இஸ்லாமிய நாட்டை நாசம் செய்கிறார். அவர் உடனே தன்னுடைய நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும். இல்லையென்றால் அவர் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று சவுதி இளவரசர் பின் சல்மானுக்கு அல்கொய்தா பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது. #AlQaedaWarning #Saudicrownprince #MohammedbinSalman
Tags:    

Similar News