செய்திகள்

குடியேறிகள் சென்ற படகு துருக்கி கடற்பகுதியில் கவிழ்ந்த விபத்தில் 9 பேர் பலி

Published On 2018-06-03 16:28 IST   |   Update On 2018-06-03 16:28:00 IST
ஐரோப்பிய நாடுகளில் குடியேறும் நோக்கத்தில் அகதிகள் சென்ற படகு துருக்கி நாட்டின் கடற்பகுதியில் இன்று கவிழ்ந்த விபத்தில் 6 குழந்தைகள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். #migrantsdrown
இஸ்தான்புல்:

உள்நாட்டுப் போரால் நிலைகுலைந்துள்ள ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்தும், வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்க நாடுகளில் இருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். 

பல்வேறு நாடுகளுக்கு கடல் கடந்து செல்லும் இந்த அகதிகள், ரப்பர் படகுகள் போன்றவற்றில் பாதுகாப்பற்ற முறையில் பயணம் செய்கின்றனர்.

மத்திய தரைக்கடல் வழியாக இவ்வாறு அகதிகளை அளவுக்கு அதிகமாக ஏற்றிச் செல்லும் படகுகள், நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி பலத்த உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தி வருவது தொடர்கதை ஆகி வருகிறது. சமீப காலமாக ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ள மக்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 25 லட்சத்தை எட்டியுள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் பேர் ஐரோப்பிய நாடுகளில் அடைக்கலம் அடைந்துள்ளனர்.

இதுதவிர, கடந்த ஆண்டில் மட்டும் இத்தாலி நாட்டுக்கு புகலிடம் தேடிச் செல்லும் வழியில் சுமார் ஐயாயிரம் பேர் காணாமல் போனதாகவும், கடலில் மூழ்கி இறந்துவிட்டதாகவும் தெரிகின்றது. இருப்பினும், உள்நாட்டில் பசி, பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ள லிபியா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த மக்கள் இன்றும் அடைக்கலம் தேடி ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக படையெடுத்தவாறு உள்ளனர். 

இவ்வகையில், ஐரோப்பிய நாடுகளில் குடியேறும் நோக்கத்தில் 15 அகதிகள் சென்ற படகு துருக்கி நாட்டின் அன்ட்டாலயா மாகாணம், டெம்ரே மாவட்டத்துகுட்பட்ட பிரபல சுற்றுலாத்தலம் அருகே கடற்பகுதியில் இன்று கவிழ்ந்த விபத்தில் 6 குழந்தைகள், ஒருபெண் உள்பட 9 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

நடுக்கடலில் சிக்கி தத்தளித்த ஒரு பெண் உள்பட 5 பேரை உயிருடன் மீட்ட துருக்கி கடலோரக் காவல் படையினர், காணாமல்போன ஒருவரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். #tamilnews #migrantsdrown
Tags:    

Similar News