செய்திகள்

680 மில்லியன் டாலர் ஊழல் - மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிடம் 4 மணிநேரம் விசாரணை

Published On 2018-05-22 18:09 IST   |   Update On 2018-05-22 18:09:00 IST
மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் அரசுப் பணம் 680 மில்லியன் டாலர்களை தனது சொந்த வங்கி கணக்கில் முதலீடு செய்த ஊழல் வழக்கில் இன்று அவரிடம் 4 மணிநேரம் விசாரணை நடைபெற்றது. #NajibRazak
கோலாலம்பூர்:

மலேசியாவின் 14-வது பாராளுமன்ற தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக 60 ஆண்டுகளுக்குப் பிறகு எதிர்க்கட்சிகள் கூட்டணி வெற்றி பெற்றது. இதையடுத்து 92 வயதான மகாதிர் முகமது அந்நாட்டின் பிரதமராக பதவியேற்றுள்ளார்.

முன்னதாக, மலேசிய அரசின் நிதியில் இருந்து 680 மில்லியன் டாலர் அளவுக்கு முறைகேடு செய்து அந்த தொகையை தனது தனிப்பட்ட வங்கிக் கணக்குகளில் மடைமாற்றி விட்டதாக அப்போதைய பிரதமர் நஜிப் ரஜாக் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து, அவர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சி தலைவராக  இருந்த மகாதிர் முஹம்மது வலியுறுத்தி வந்தார். தேர்தலில் தோல்வி அடைந்த பின்னர் கட்சி தலைவர் பதவியையும் நஜிப் ரசாக் ராஜினாமா செய்தார்.

அதைத் தொடர்ந்து, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஊழல் புரிந்து உள்ளதாக நஜிப் ரசாக் மீது எழுந்த குற்றச்சாட்டு சூடு பிடிக்கத்தொடங்கியது. அவர் நாட்டை விட்டு வெளியேறக்கூடாது என தடை விதிக்கப்பட்டது.

அவரது வீட்டிலும், அவருக்கு சொந்தமான இடங்களிலும் போலீசார் அதிரடி சோதனைகள் நடத்தினர். அங்கு இருந்து பணக்கட்டுகள், நகைகள் வைத்து நிரப்பப்பட்ட ஏராளமான கைப்பைகள் சிக்கின.

இந்த நிலையில் அவர் இன்று விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று அந்நாட்டின் ஊழல் தடுப்பு கமிஷன் சம்மன் அனுப்பியது.

இதைதொடர்ந்து ஊழல் தடுப்பு கமிஷனர் முஹம்மது ஷுக்ரி அப்துல் முன்னர் ஆஜரான நஜிப் ரசாக்கிடம் இன்று வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. விசாரணைக்கு பின்னர் அலுவலகத்தின் வெளியே கூடியிருந்த செய்தியாளர்களை சந்தித்த நஜிப் ரசாக், வரும் வியாழக்கிழமை நடைபெறும் விசாரணையிலும் ஆஜராவேன் என்று தெரிவித்தார்.

இந்நிலையில், மலேசியா நாட்டில் கடந்த 2006-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட மங்கோலியா நாட்டு மாடல் அழகி கொலை வழக்கில் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கை தொடர்புப்படுத்தி, மறு விசாரணை நடத்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. #NajibRazak
Tags:    

Similar News