செய்திகள்

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே.. - புதினிடம் மோடி நெகிழ்ச்சி

Published On 2018-05-21 13:57 GMT   |   Update On 2018-05-21 14:21 GMT
ரஷிய அதிபர் புதினை இன்று சந்தித்து பேசிய பிரதமர் மோடி, 18 ஆண்டுகளுக்குமுன் குஜராத் முதல்வராக இருந்தபோது நான் சந்தித்த முதல் உலக தலைவர் நீங்கள்தான் என குறிப்பிட்டார். #IndoRussianties #PMModineetsPutin
மாஸ்கோ:

நான்காவது முறை ரஷிய அதிபராக பதவியேற்று கொண்ட விளாடிமிர் புதினை பிரதமர் நரேந்திர மோடி இன்று சந்தித்து 125 கோடி இந்திய மக்களின் சார்பாக வாழ்த்து தெரிவித்தார். இந்தியா-ரஷியா இடையிலான பல்வேறு தரப்பு உறவுகளை பலப்படுத்தும் விதமாக உயர்மட்ட ஆலோசனை நடத்த வருகை தருமாறு அழைப்பு விடுத்த புதினுக்கு நன்றியும் தெரிவித்தார்.

எனது அரசியல் வாழ்க்கையில் ரஷியாவுக்கும் உங்களுக்கும் (புதின்) எப்போதுமே சிறப்புக்குரிய முக்கியத்துவம் உண்டு. குஜராத் முதல் மந்திரி என்ற வகையில் நான் சந்தித்த முதல் வெளிநாட்டு தலைவர் நீங்கள்தான். அதனால், என்னுடைய சர்வதேச உறவுகள் உங்களிடம் இருந்தும், ரஷியாவில் இருந்தும்தான் முதன்முதலாக தொடங்கியது என்று அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

இருநாடுகளுக்கு இடையிலான உயர்மட்ட ஆலோசனைக்கு அழைப்பு விடுத்தமைக்காகவும்,ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இந்தியா அங்கம் வகிக்க தொடர்ந்து ஆதரவு தெரிவித்துவரும் புதினுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி, கடந்த 2001-ம் ஆண்டில் இந்தியாவின் பிரதமராக அடல் பிஹாரி வாஜ்பாய் பதவி வகித்தபோது, குஜராத் மாநில முதல் மந்திரியாக ரஷியாவுக்கு வந்த சம்பவத்தை இன்று நினைவு கூர்ந்தார்.

அதன்பிறகு, கடந்த 18 ஆண்டுகளில் பலமுறை உங்களை சந்திக்கவும், இந்தியா - ரஷியா இடையிலான நல்லுறவுகளை அடுத்த நிலைக்கு கொண்டு செல்வது தொடர்பாகவும் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாகவும் ஆலோசனை நடத்தும் வாய்ப்பை நான் பெற்றிருக்கிறேன் எனவும் மோடி குறிப்பிட்டார். #IndoRussianties #PMModineetsPutin
Tags:    

Similar News