செய்திகள்

ரோஹிங்கியா இன மக்களுக்கு எதிரான கொடுமைகள் தொடர்பாக உரிய விசாரணை - ஐ.நா. தூதர்கள் வலியுறுத்தல்

Published On 2018-05-01 15:11 GMT   |   Update On 2018-05-01 15:11 GMT
மியான்மர் நாட்டில் ரோஹிங்கியா இன மக்கள் மீது ராணுவம் நடத்திய அடக்குமுறை, கற்பழிப்பு தொடர்பாக ’உரிய’ விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐ.நா.பாதுகாப்பு சபை தூதர்கள் வலியுறுத்தியுள்ளனர். #UNenvoy #Rohingyaallegations#probe
நய்பிடா:

மியான்மரின் வடக்குப் பகுதியான ரக்கினே மாநிலத்தில் சிறுபான்மை ரோஹிங்கியா இன முஸ்லிம்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். அவர்களுக்கு எதிரான இன அழிப்பு முயற்சியில் ராணுவம் ஈடுபட்டது.

கடந்த ஆண்டு நடைபெற்ற ராணுவத்தினரின் உச்சகட்ட தாக்குதலால் உயிருக்கு பயந்து சுமார் 7 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் வங்காளதேசத்திற்கு தப்பிச் சென்றனர். மியான்மரில் இருந்தபோது ரோஹிங்கியா இனப் பெண்களை ராணுவத்தினர் கொடூரமான முறையில் கற்பழித்ததாகவும் தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையை சேர்ந்த தூதர்கள் கடந்த 4 நாட்களாக ராணுவத்தின் அத்துமீறல்கள் தொடர்பாக வங்காளதேசம் நாட்டின் அகதிகள் முகாமில் தங்கியுள்ள மக்களை நேர்காணல் செய்தனர்.

நேற்று, மியான்மரில் உள்ள ரக்கினே மாநிலத்துக்கு ஆய்வு செய்தனர். பாதிக்கப்பட்ட மக்களை அவர்கள் நேரடியாக சந்தித்து குற்றச்சாட்டுகளையும், குறைகளையும் கேட்டறிந்தனர்.


வங்காளதேசம் பிரதமர் ஷேக் ஹசினா, மியான்மர் ஆளும்கட்சி தலைவர் ஆங் சான் சூகி மற்றும் அந்நாட்டின் முப்படை தளபதி மின் ஆங் ஹ்லியாங் ஆகியோரை அவர்கள் சந்தித்துப் பேசினர்.

வங்காளதேசத்தில் இருந்து மியான்மருக்கு தினசரி 150 பேர் வீதம் திரும்பினால் அவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள தங்குமிடம், மற்றும் சுமார் 30 ஆயிரம் தங்குவதற்கு அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாம்களை அவர்கள் பார்வையிட்டனர்.

மனிதநேயம் மற்றும் மனித உரிமைகளை மீறிய வகையில் நடந்ததாக கூறப்படும் ராணுவத்தின் அத்துமீறல்கள் மற்றும் கற்பழிப்புகள் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.நா. பாதுகாப்பு சபை தூதர்கள் வலியுறுத்தினர்.

விசாரணையில் தவறாக நடந்து கொண்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பிரிட்டன் நாட்டுக்கான ஐக்கிய நாடுகள் சபை தூதர் காரென் பியர்ஸ்-இடம் மியான்மர் நாட்டு முப்படை தளபதி மின் ஆங் ஹ்லியாங் உறுதியளித்ததாக அந்நாட்டு ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன.

#UNenvoy #Rohingyaallegations#probe
Tags:    

Similar News