செய்திகள்

தேசிய துக்கத்துக்கு இடையில் ரஷியா வணிக வளாக தீ விபத்தில் பலியான குழந்தைகள் உடல் அடக்கம்

Published On 2018-03-28 11:50 GMT   |   Update On 2018-03-28 11:50 GMT
ரஷியா வணிக வளாக தீ விபத்தில் பலியான குழந்தைகளின் உடல்கள் தேசிய துக்கத்துக்கு இடையில் இன்று அடக்கம் செய்யப்பட்டு வருகின்றன.
மாஸ்கோ:

ரஷியாவின் சைபீரியா மாகாணத்தில் உள்ளது கெம்ரோவோ நகரம். இங்குள்ள வின்ட்டர் செர்ரி மால் வணிக வளாகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் பலர் ஷாப்பிங் செய்து கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென அந்த மாலில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அங்கு குவிந்திருந்த மக்கள் அலறியடித்தபடி அங்குமிங்கும் ஓடினர். தகவலறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த தீ விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 64 ஆக அதிகரித்துள்ளது. இறந்தவர்களில் 41 பேர் குழந்தைகள் என இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தீ விபத்து நிகழ்ந்த வணிக வளாகத்தை ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

வணிக வளாக நிர்வாகத்தினரின் மிக மோசமான குற்றவியல் சார்ந்த மெத்தனப்போக்கால் (criminal negligence) இந்த
கோர விபத்து நிகழ்ந்ததாக புதின் வருத்தம் தெரிவித்தார். இந்த சம்பவத்துக்கு காரணமானவர்கள் கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என குறிப்பிட்டுள்ள அவர், 64 உயிர்கள் பலியானதற்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் நாடு முழுவதும் இன்று (28-ம் தேதி) தேசிய துக்கதினம் அனுசரிக்குமாறு அதிபர் புதின் கேட்டுக் கொண்டார்.

இதையொட்டி, அரசு அலுவலகங்களில் தேசிய கொடிகள் இன்று அரை கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளன. வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் கேளிக்கை சார்ந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.



இதற்கிடையில், தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் உடல்கள் இன்று அடக்கம் செய்யப்பட்டு வருகின்றன. பெற்றோர்கள், உறவினர்களின் கண்ணீர் மற்றும் பிரார்த்தனை பாடல்களுக்கு இடையில் பல்வேறு இடங்களில் உடல்கள் அடக்கம் செய்யப்படும் காட்சிகளை உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. #Tamilnews
Tags:    

Similar News