செய்திகள்

போலி படங்களை காட்டுவதை தடுக்க நடவடிக்கை: ஐ.நா. பொதுச்சபை தலைவர் அறிவிப்பு

Published On 2017-09-27 19:56 GMT   |   Update On 2017-09-27 19:56 GMT
இந்தியா மீது பழி சுமத்துவதற்கு பாகிஸ்தான் நடத்திய நாடகம் அம்பலத்துக்கு வந்ததால், போலி படங்களை காட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஐ.நா. பொதுச்சபை தலைவர் அறிவித்தார்.
நியூயார்க்:

இந்தியா மீது பழி சுமத்துவதற்கு பாகிஸ்தான் நடத்திய நாடகம் அம்பலத்துக்கு வந்ததால், போலி படங்களை காட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஐ.நா. பொதுச்சபை தலைவர் அறிவித்தார்.

அமெரிக்காவில் நியூயார்க் நகரில் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் கடந்த சனிக்கிழமை பங்கேற்று பேசினார். அப்போது அவர், பயங்கரவாதத்துக்கு துணைபோகும் பாகிஸ்தானின் முகத்தை தோலுரித்து காட்டினார்.

அடுத்த சில மணி நேரத்தில் தனது பதில் அளிக்கும் உரிமையை பயன்படுத்தி ஐ.நா. பொதுச்சபையில், பாகிஸ்தானுக்கான நிரந்தர பிரதிநிதி மலீஹா லோதி பேசினார். அப்போது அவர் காஷ்மீர் விவகாரத்தை எழுப்பினார்.

காஷ்மீரில் மனித உரிமைகள் மீறப்படுகிறது என குற்றம் சாட்டிய அவர், இந்தியப் படையினரின் துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்ட பெண் என்று ஒருவரது படத்தை தூக்கிப்பிடித்து காட்டினார். “இதுதான் இந்திய ஜனநாயகத்தின் முகம்” என அவர் சாடினார்.

இந்த படத்தை பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகமும் தனது அதிகாரபூர்வ டுவிட்டரில் வெளியிட்டுள்ளது. ஆனால் அவர் காட்டிய புகைப்படம் போலியானது.

அந்த படத்தில் இடம் பெற்றிருந்தவர், காஷ்மீர் பெண் அல்ல. அவர், காசா நகரில் இஸ்ரேல் தாக்குதலில் படுகாயம் அடைந்த 17 வயது பெண், ராவ்யா அபு ஜோமா ஆவார். அந்தப் படத்தை 2014-ம் ஆண்டு, அமெரிக்க புகைப்பட கலைஞர் ஹெய்தி லெவின் எடுத்து வெளியிட்டு, அது அந்த காலகட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதாகும். இந்த படத்தை இந்தியப் படையின் தாக்குதலில் பாதிப்புக்குள்ளான காஷ்மீர் பெண் என ஐ.நா. பொதுச்சபையில் காட்டி, தனது கருத்துக்கு வலு சேர்க்க பாகிஸ்தான் பிரதிநிதி மலீஹா லோதி நாடகமாடியதையும், அவர் காஷ்மீர் பெண் அல்ல, காசா நகர் பெண் என்பதையும் உரிய ஆதாரத்துடன் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் இந்திய தூதரக உயர் அதிகாரி பவுலோமி திரிபாதி நிரூபித்து காட்டினார்.



இந்த நிலையில் ஐ.நா. பொதுச்சபை தலைவர் மைரோஸ்லாவ் லஜ்காக்கிடம், பாகிஸ்தான் பிரதிநிதி போலியான படத்தை காட்டி பேசிய விவகாரம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். “இப்படி பொதுச்சபை கூட்டத்தில் தவறான படங்களை காட்டாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படுமா?” என கேட்டனர்.

அதற்கு அவர் பதில் அளிக்கையில், “நிச்சயம் இது குறித்து சந்திப்பேன். அதே நேரத்தில் இது ராஜ்ய ரீதியிலான விவகாரம்” என்று கூறினார்.

தொடர்ந்து அவர் கூறும்போது, “ இதற்கு நான் பதில் அளிக்க கூடாது. இதில் தொடர்புடைய பிரதிநிதிகள்தான் முடிவு எடுக்க வேண்டும். இதை (இந்த சந்தர்ப்பத்தை) நான் பயன்படுத்த விரும்புகிறேன். ஆனால், நான் ஐ.நா. பொதுச்சபை தலைவர் பதவியை தவறாக பயன்படுத்த மாட்டேன்” என்றும் கூறினார்.

Tags:    

Similar News