செய்திகள்

பாகிஸ்தானில் 8 தலிபான் தீவிரவாதிகளுக்கு தூக்கு தண்டனை

Published On 2016-12-30 05:22 GMT   |   Update On 2016-12-30 05:22 GMT
பாகிஸ்தானில் 8 தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
ராவல்பிண்டி:

பாகிஸ்தானில் கடந்த 2014-ம் ஆண்டு பெஷாவர் ராணுவ பள்ளியில் புகுந்து 150 குழந்தைகள் உள்ளிட்டோரை தலிபான் தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். அதை தொடர்ந்து அங்கு நிறுத்தி வைத்திருந்த தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டு வருகிறது. அவை ராணுவ கோர்ட்டில் உறுதி செய்யப்பட்டவுடன் மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது.

அந்த வகையில் ஏற்கனவே தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 8 தீவிரவாதிகளின் தண்டனை ராணுவ கோர்ட்டினால் உறுதி செய்யப்பட்டது. அவர்களில் சுவாத் பகுதியில் தலிபான் தீவிரவாத அமைப்பின் செய்தி தொடர்பாளராக இருந்த முஸ்லிம்கான் (62) என்பவர் முக்கியமானவர் ஆவார்.

இவர் நடத்திய தாக்குதலில் 31 பேர் பலியாகி உள்ளனர். 69 பேர் காயம் அடைந்துள்ளனர். 4 ராணுவ வீரர்களையும் கொலை செய்துள்ளார். மேலும் பிணைத் தொகைக்காக 2 சீன என்ஜினீயர்கள் மற்றும் பொதுமக்களை கடத்தி பணம் பறித்து இருக்கிறான்.

இவர் தவிர 2015-ம் ஆண்டு பஸ் மீது தாக்குதல் நடத்தி பலரை கொன்று குவித்த 4 தீவிரவாதிகளும் அடங்குவர். இவர்களின் தண்டனை விரைவில் நிறைவேற்றப்பட உள்ளது.

Similar News