செய்திகள்

நாட்டைவிட்டு வெளியேற உதவுமாறு முன்னாள் ராணுவ தளபதியிடம் ஒருபோதும் கேட்கவில்லை: முஷாரப் திடீர் பல்டி

Published On 2016-12-27 06:28 IST   |   Update On 2016-12-27 06:28:00 IST
பாகிஸ்தானில் இருந்து வெளியேற உதவுமாறு முன்னாள் ராணுவ தளபதி ரஹீல் ஷெரிப்பிடம் ஒரு போதும் உதவி கேட்கவில்லை என்று முன்னாள் அதிபர் முஷாரப் தெரிவித்துள்ளார்.
கராச்சி:

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்(73). 2007-ம் ஆண்டு பாகிஸ்தான் அதிபராக பதவி வகித்த முஷாரப் அந்நாட்டில் நெருக்கடி நிலையை பிரகனப்படுத்தியும், நீதிபதிகளை காவலில் வைத்தும் உத்தரவிட்டார். இதனால் அவர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், நீதிமன்ற விசாரணையை அவர் பாகிஸ்தானில் தங்கி எதிர்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.

ஆனால் தனது உடல்நிலையைக் காரணம் காட்டி அரசிடம் அனுமதி பெற்று முஷாரப் வெளிநாடு சென்றுவிட்டார். தற்போது வெளிநாட்டில் தங்கியிருக்கும் முஷாரப் அவ்வப்போது பரபரப்பான பேட்டிகளைக் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் பாகிஸ்தானை விட்டு வெளியேற உதவுமாறு ரஹீலிடம் ஒரு போது கேட்டதில்லை என்று முஷாரப் தெரிவித்துள்ளார். தான் கூறிய கருத்தினை ஊடகங்கள் மாற்றி வெளியிட்டு விட்டதாக கூறியுள்ளார்.

இது குறித்து தனியார் தொலைக்காட்சியில் முஷாரப் அளித்த பேட்டியில், “என்னை யாரும் அணுக வில்லை. நானும் யாரையும் அணுகவில்லை. இது குறித்து ரஹீல் ஷெரிப் என்னிடம் எதுவும் கலந்துரையாட வில்லை. நானும் அவரிடம் எந்த உதவியும் கேட்கவில்லை” என்று தெரிவித்தார்.

முன்னதாக, பாகிஸ்தான் நாட்டில் இருந்து வெளியேற முன்னாள் ராணுவ தளபதி ரஹீல் ஷெரிப் உதவி செய்தார் என முஷாரப் சில தினங்களுக்கு முன்பு பரபரப்பாக பேட்டி அளித்திருந்தார்.

3 ஆண்டுகள் ராணுவ தளபதியாக பதவி வகித்த ரஹீல் ஷெரிப், கடந்த செப்டம்பர் மாதம் தான் பணியிலிருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Similar News