செய்திகள்

தாய்லாந்தில் புலித்தோல்-பற்களுடன் தப்ப முயன்ற புத்த பிட்சு

Published On 2016-06-03 09:30 GMT   |   Update On 2016-06-03 09:30 GMT
தாய்லாந்தில் புலித்தோல் மற்றும் அதனுடைய பற்களுடன் தப்ப முயன்ற புத்த பிட்சு உள்பட 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாங்காங்:

தாய்லாந்தில் காஞ்சன்புரி மாகாணத்தில் வாட் யி லாங் என்ற இடத்தில் உள்ள புத்தர் கோவிலில் 100-க்கும் மேற்பட்ட புலிகள் வளர்க்கப்படுகின்றன. எனவே அதை புலிக்கோவில் என்றழைக்கின்றனர்.

அங்கு சட்டவிரோதமாக வளர்க்கப்படும் புலிகளை வனத்துறையினர் பறிமுதல் செய்து வருகின்றனர். இதுவரை 50-க்கும் மேற்பட்ட புலிகள் கைப்பற்றப்பட்டு அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளன.

மேலும் அங்குள்ள 50 புலிகளை வெளியேற்றும் நடவடிக்கையில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். அதற்காக கோவிலில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் அங்கிருந்து சென்ற புத்த பிட்சுவின் காரை போலீசார் சோதனையிட்டனர். அதில் ஒரு சூட்கேசில் புலித்தோல் மற்றும் புலி பற்கள் கடத்தப்பட்டது தெரிய வந்தது. எனவே அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் அவற்றை கடத்த முயன்ற புத்த பிட்சு மற்றும் 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்துகின்றனர். இச்சம்பவத்தை தொடர்ந்து கோவில் வளாகத்துக்குள் தங்கியிருக்கும் பல புத்த பிட்சுகளின் இருப்பிடம் சோதனையிடப்பட்டது.

அங்கு 2 புலி உடலுடன் கூடிய தோல்கள், 10 புலி பற்கள், 50-க்கும் மேற்பட்ட புலி ரோம பண்டல்கள் இருந்தன. அவையும் கைப்பற்றப்பட்டது. அதை தொடர்ந்து கோவிலுக்குள் இருந்து எந்த ஒரு வாகனமும் வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இங்கு சட்டத்துக்கு புறம்பாக புலிகள் வளர்க்கப்படுவதாகவும், மருந்துக்காக அவை கொல்லப்பட்டு உடல் பாகங்கள் சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் எழுந்த புகார் தொடர்ந்து அங்கு இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Similar News