10 சதவீத வரி விதிப்பு: டிரம்பின் மிரட்டலுக்கு பணிய மாட்டோம்- ஐரோப்பிய நாடுகள் அதிரடி
- நாங்கள் நிச்சயமாக அமெரிக்க நிர்வாகத்துடன் நேரடியாகப் பேசுவோம்.
- ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 நாடுகளின் அவசர கூட்டம் நடக்கிறது.
கிரீன்லாந்து விவகாரத்தில் டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கைக்கு ஐரோப்பிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் கூறும்போது, டிரம்ப் விதித்துள்ள வரிகள் அட்லாண்டிக் கடந்த உறவு களைப் பலவீனப்படுத்தும். ஒரு ஆபத்தான சரிவுப் பாதைக்கு வழிவகுக்கும். ஐரோப்பா ஒற்றுமையுடனும், ஒருங்கிணைப்புடனும் தனது இறையாண்மையைக் காப்பதில் உறுதியுடனும் இருக்கும் என்றார்.
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரேன் கூறும்போது, 'வரி அச்சுறுத் தல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை, இந்தச் சூழலில் அவற்றுக்கு இடமில்லை. ஐரோப்பிய இறையாண்மை நிலைநிறுத்தப்படுவதை நாங்கள் உறுதி செய்வோம். இந்த மனப்பான்மையுடனேயே நான் எங்கள் நட்பு ஐரோப்பியப் நாடுகளுடன் பேச்சு வார்த்தை நடத்துவேன்' என்றார்.
இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர் கூறும்போது, 'நேட்டோவின் கூட்டுப் பாதுகாப்பிற்காகச் செயல்ப டும் நட்பு நாடுகளின் மீது வரிகளை விதிப்பது முற்றிலும் தவறானது. இது குறித்து நாங்கள் நிச்சயமாக அமெரிக்க நிர்வாகத்துடன் நேரடியாகப் பேசுவோம்.
ஆர்க்டிக் பாதுகாப்பு முழு நேட்டோவிற்கும் முக்கியமானது என்பதையும், ஆர்க்டிக்கின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் ரஷ்யாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள நட்பு நாடுகள் அனைத்தும் இணைந்து மேலும் அதிகமாகச் செயல் பட வேண்டும்' என்றார்.
சுவீடன் பிரதமர் உல்ப் கிறிஸ்டர்சன் கூறும்போது, 'நாங்கள் எங்களை அச்சுறுத்த அனுமதிக்க மாட்டோம். தங்களைப் பாதிக்கும் விஷயங்கள் குறித்து டென்மார்க்கும் கிரீன்லாந்தும் மட்டுமே முடிவெடுக்கும். நான் எப்போதும் என் நாட்டையும் எங்கள் நட்பு அண்டை நாடுகளையும் பாதுகாப்பேன்' என்றார்.
இதற்கிடையே டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கை தொடர்பாக விவாதிக்க இன்று ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 நாடுகளின் அவசர கூட்டம் நடக்கிறது.