செய்திகள்

டொனால்ட் டிரம்ப் நடவடிக்கைக்கு எதிரான போராட்டம்: களத்தில் குதித்த கூகுள் இணை நிறுவனர்

Published On 2017-01-29 10:49 GMT   |   Update On 2017-01-29 10:49 GMT
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பிற்கு எதிராக அமெரிக்க விமான நிலையத்தில் நடைபெற்ற போராட்டத்தில் கூகுள் நிறுவனத்தின் இணை நிறுவனரான செர்ஜி ப்ரின் கலந்து கொண்டுள்ளார்.
சான்பிரான்சிஸ்கோ:

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்ட புதிய உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து சான்பிரான்சிஸ்கோ சர்வதேச விமான நிலையத்தில் நடைபெற்ற போராட்டத்தில் கூகுள் இணை நிறுவனரும், ஆல்ஃபாபெட் நிறுவனத்தின் தலைவருமான செர்ஜி ப்ரின் கலந்து கொண்டள்ளார்.

ஈராக், ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், ஏமன் மற்றும் சிரியா உள்ளிட்ட ஏழு நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைய புதிய கட்டுப்பாடுகளை விதிக்கும் உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சில தினங்களுக்கு முன் கையெழுத்திட்டார்.

உலகின் பிரபல தொழில்நுட்ப நிறுவனங்களின் அலுவலகங்கள் இயங்கி வரும் சிலிகான் வேலியில் அமெரிக்க அதிபரின் புதிய உத்தரவிற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஏற்கனவே கூகுள், ஃபேஸ்புக், மைக்ரோசாப்ட், ஆப்பிள் என பல்வேறு நிறுவனங்களும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றன.

சிலிகான் வேலி மட்டுமில்லாமல் அமெரிக்கா முழுக்க இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு கிளம்பியிருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் இன்று அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ சர்வதேச விமான நிலையத்தில் டிரம்ப்பின் நடவடிக்கைக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. இதில் கூகுள் இணை நிறுவனரும் கலந்து கொண்டார்.

தானும் ஓர் அகதி தான் என செர்ஜி ப்ரின் தனது ட்விட்டரில் கருத்து பதிவு செய்துள்ளார். 1979 ஆம் ஆண்டு தனது குடும்பம் சோவியத் யூனியனில் இருந்து அமெரிக்காவிற்கு குடியேறியது. தனது குடும்பத்தாரும் அகதிகள் என்பதால் தனிப்பட்ட முறையில் இப்போராட்டத்தில் கலந்து கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.  

Similar News