செய்திகள்

தோல் புற்றுநோயை கண்டறிய ஸ்மார்ட் மென்பொருள் தயார்

Published On 2017-01-28 10:12 GMT   |   Update On 2017-01-28 10:12 GMT
செயற்கை நுண்ணறிவு மென்பொருள் உதவியுடன் தோல் புற்றுநோயை கண்டறியும் புதிய வழிமுறையினை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
கலிபோர்னியா:

மனித உடலில் தோல் சார்ந்த வியாதிகளை கண்டறிவது சற்றே கடினம் ஆகும். அதுவும் தோல் புற்றுநோய் இருப்பதற்கான அறிகுறிகளை உணர முடியாது. தற்சமயம் வரை பலருக்கும் சிக்கல் ஏற்படுத்தும் இது போன்ற வியாதிகளை எதிர்காலத்தில் தானாக கண்டறிந்து அதற்கேற்ப சிகிச்சை பெற்றுக் கொள்ள முடியும். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியோடு இது சாத்தியமாக்கப்பட்டுள்ளது.

நம் உடலில் தோல் நோய் இருப்பதை கண்டறியும் திறன் கொண்ட செயற்கை நுண்ணறிவு மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை ஒப்பிட்டு பார்த்து நம் உடலில் தோல் நோய் இருப்பதை இந்த செயற்கை நுண்ணறிவு மென்பொருள் சரியாக உறுதி செய்துவிடுகிறது.    

ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியிருக்கும் இந்த மென்பொருள் தோல் புற்றுநோய் இருப்பதை கண்டறியும். உடலில் இருக்கும் நோயினை உறுதி செய்ய கணினி ஆய்வாளர்கள் மற்றும் தோல் மருத்துவர்களின் உதவியுடன் இந்த மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த மென்பொருள் தான் கண்டறிந்த பதில்களை மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் வழங்கிய தகவல்களுடன் ஒப்பிட்டு பின் நோய் இருப்பதை உறுதி செய்கிறது.  

செயற்கை நுண்ணறிவு மென்பொருளை பயிற்றுவிக்க தோல் புற்றுநோயினை கண்டறியும் பொருளாக (skin cancer identification) குறிப்பிட்டனர். பின் டீப் லேர்னிங் வழிமுறை (Deep learning) கொண்டு பயிற்சி வழங்கப்பட்டது. Deep learning வழிமுறை மனித மூளை போன்றே வேலை செய்கிறது. இதுவே செயற்கை நுண்ணறிவின் மூலக்கருவாக இருக்கிறது.  

தோல் புற்றுநோயினை கண்டறிய பல்வேறு புகைப்படங்கள் மற்றும் தரவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மென்பொருள் வழங்கும் பதில்கள் கச்சிதமாக இருக்க வேண்டும் என்பதற்காக தோல் புற்றுநோய் இருக்கும் பல்வேறு புகைப்படங்கள் வழங்கப்பட்டன.

பின் இந்த மென்பொருள் பல்வேறு நிலைகளில் சோதிக்கப்பட்டது. இதில் பல்வேறு விதமான தோல் புற்றுநோய்களை செயற்கை நுண்ணறிவு மென்பொருள் மிகவும் கச்சிதமாக உறுதி செய்துள்ளது.

Similar News