தமிழ்நாடு செய்திகள்

கட்டிலுடன் இளைஞர் எரித்துக்கொலை: விசாரணையில் அதிர்ச்சி தகவல்- கைதான தாய்- நடந்தது என்ன?

Published On 2025-04-21 18:20 IST   |   Update On 2025-04-21 18:20:00 IST
  • திருச்சி மாவட்டம் தா.பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
  • கொலையாளிகளை போலீசார் தேடி வந்த நிலையில் கோபிநாத்தின் தாய் செல்வி கைது செய்துள்ளனர்.

திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள தா.பேட்டை சேந்தமங்கலம் அம்பாய் பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மனைவி செல்வி. இந்த தம்பதியரின் மகன் கோபிநாத் (வயது 26). டிப்ளமோ பட்டதாரி.

தாயும் மகனும் வேலம்பட்டியில் உள்ள தோட்டத்து வீட்டில் வசித்து வந்தனர். நேற்று இரவு வழக்கம்போல் கோபிநாத் சாப்பிட்டுவிட்டு தூங்கச் சென்றார்.

வீட்டில் புழுக்கம் அதிகமாக இருந்ததால் வீட்டின் முன்பு திறந்த வெளியில் கட்டில் போட்டு தூங்கி உள்ளார். தாய் வீட்டுக்குள் படுத்து உறங்கினார்.

நள்ளிரவு அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் கோபிநாத் உடலின் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து கொளுத்தினர். இதில் தீ உடல் முழுவதும் பரவி, உடல் கருகி, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக அவர் உயிரிழந்தார்.

இது எதுவும் தெரியாமல் அவரது தாயார் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்ததாக கூறப்பட்டது. இன்று காலை எழுந்து பார்த்தபோது, மகன் உடல் எரிந்த நிலையில் பிணமாக கிடப்பது கண்டு அலறி துடித்துள்ளார்.

பின்னர் இது குறித்து தாப்பேட்டை போலீசுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த துணை போலீஸ் அதிகாரி சுரேஷ்குமார், தா.பேட்டை இன்ஸ்பெக்டர் அனந்த பத்மநாபன், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் முத்துச்சாமி மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்றனர்.

பின்னர், மோப்ப நாய் உதவியுடன் விசாரணை தொடங்கப்பட்டது. அது சம்பவ இடத்தை மோப்பம் பிடித்து விட்டு சிறிது தூரம் சென்று நின்றுவிட்டது. கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? எதுவும் உடனடியாக தெரியவில்லை.

இது குறித்து தாப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், இந்த கொலை சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கொலையாளிகளை போலீசார் தேடி வந்த நிலையில் கோபிநாத்தின் தாய் செல்வி கைது செய்துள்ளனர்.

இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியபோது, தாயின் எதிர்ப்பையும் மீறி சொத்தை விற்பதற்காக கோபிநாத் ரூ.9 லட்சம் முன்பணம் வாங்கியுள்ளார்.

பிறகு, தாயிடம் பணத்தை தராமல் தானே வைத்துக் கொண்டு குடிபோதையில் கோபிநாத் திளைத்து வந்துள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த தாய் செல்வி கோடாலியால் கழுத்தை வெட்டி பின்னர் டீசல் ஊற்றி எரித்துக் கொலை செய்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Tags:    

Similar News