முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மாற்றுத்திறனாளி வாலிபர் கைது
- தேனாம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
- ஏற்கனவே 2 முறை வெடிகுண்டு மிரட்டல்களை விடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை:
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு நேற்று தொலைபேசி மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து பேசிய மர்மநபர் முதலமைச்சரின் வீட்டில் குண்டு வைத்திருப்பதாக தெரிவித்துவிட்டு போனை துண்டித்து விட்டார்.
இது பற்றி தகவல் கிடைத்ததும் வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து சென்று மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை மிரட்டல் வெறும் புரளி என தெரிய வந்தது.
இது தொடர்பாக தேனாம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். மிரட்டல் விடுக்கப்பட்ட செல்போன் நம்பரை வைத்து துப்பு துலக்கியதில் திருப்போரூரை சேர்ந்த ஐயப்பன் என்ற வாலிபர் சிக்கினார்.
மாற்றுத்திறனாளியான இவர் இதுபோன்று ஏற்கனவே 2 முறை வெடிகுண்டு மிரட்டல்களை விடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கோயம்பேடு பஸ் நிலையம் உள்ளிட்ட சில இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக கடந்த 2020 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டுள்ள ஐயப்பன் 2021-ம் ஆண்டிலும் முதலமைச்சர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கைதாகி உள்ளார். இந்த நிலையில்தான் தற்போதும் அவர் வெடிகுண்டு மிரட்டல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஐயப்பன் மாற்றுத்திறனாளி என்பதால் அவரது குடும்பத்தினர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவரை எச்சரித்து அனுப்பி உள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
இருப்பினும் இதுபோன்று வெடிகுண்டு மிரட்டல் சம்பவங்களில் யார் ஈடுபட்டாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.