தமிழ்நாடு செய்திகள்

'நாடோடிகள்' பாணியில் களேபரம்- நண்பர்களுடன் காரில் சென்று காதலியை கடத்திய வாலிபர்

Published On 2025-08-10 14:00 IST   |   Update On 2025-08-10 14:00:00 IST
  • குமரேசனும்-அனுசுயாவும் திருச்சி தனியார் விடுதியிலேயே சில நாட்கள் தங்கியிருந்தனர்.
  • தெருமுனையில் காரை நிறுத்திய குமரேசன் தனது நண்பர்கள் 3 பேரை அனுப்பினார்.

அரியலூர்:

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரை அடுத்த செங்கராயன் கட்டளை கிராமத்தைச் சேர்ந்தவர் மதியழகன். இவரது மகள் அனுசியா (வயது 23). இவர் சென்னை கிளாம்பாக்கத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார்.

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரை அடுத்துள்ள மாங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் குமரேசன். இவர் சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார். அனுசியாவுக்கும், குமரேசனுக்கும் 'இன்ஸ்டாகிராம்' மூலம் பழக்கம் ஏற்பட்டு, பின்னர் அது நாளடைவில் காதலாக மாறியது.

இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இருவரும் நேரில் சந்தித்தனர். பின்னர் இளைஞரின் சொந்த ஊரான மாங்குடி கிராமத்திற்கு சென்ற காதல் ஜோடியை குமரேசனின் பெற்றோர் ஏற்க மறுத்து திட்டி அனுப்பியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து குமரேசனும்-அனுசுயாவும் திருச்சி தனியார் விடுதியிலேயே சில நாட்கள் தங்கியிருந்தனர். இந்த தகவலை அறிந்த குமரேசனின் பெற்றோர், அனுசுயாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.

செங்கராயன் கட்டளை கிராமத்திலிருந்து திருச்சி சென்ற அனுசுயாவின் உறவினர்கள், அவரை சொந்த ஊருக்கு அழைத்து வந்துள்ளனர். மேலும் அனுசுயாவை கண்டித்து அவரது செல்போனையும் வாங்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.

பின்னர் அனுசுயாவை, சின்ன பட்டாக்காடு கிராமத்தில் உள்ள தனது மூத்த மகள் ஐஸ்வர்யாவின் இல்லத்தில் கடந்த 10 நாட்களாக தங்க வைத்தனர். சின்ன பட்டாக்காடு கிராமத்தில் இருந்தபடியே அனுசியா, இந்த தகவலை தனது காதலனுக்கு செல்போன் மூலம் ரகசியமாக தெரிவித்துள்ளார். இதையடுத்து காதலன் குமரேசன் வாடகை கார் மூலம் அரியலூர் மாவட்டம் சின்ன பட்டாக்காடு கிராமத்திற்கு தனது நண்பர்களுடன் வந்தார்.

தெருமுனையில் காரை நிறுத்திய குமரேசன் தனது நண்பர்கள் 3 பேரை அனுப்பினார். அங்கு 3 பேரும் அனுசுயா தங்கி இருக்கும் வீட்டில் திருமண அழைப்பிதழ் கொடுப்பதுபோல் கையில் மஞ்சள் பை ஒன்றை பிடித்தபடியே நடந்து சென்றனர்.

காதலனின் நண்பர்களை கண்டதும், அக்கா குழந்தையுடன் விளையாடி கொண்டிருந்த அனுசியா குழந்தையை அப்படியே விட்டு விட்டு எழுந்து ஓட ஆரம்பித்தார். காரில் காத்திருந்த காதலன் குமரேசனுடன் கைகோர்த்த அவர், சட்டென்று ஏறி வண்டியில் அமர்ந்து கொண்டார். உடனே அவரது நண்பர்களுடன் காரில் ஏறி நொடிப் பொழுதில் தப்பிச் சென்றனர். தனது சகோதரி காரில் ஏறி தப்பி செல்வதைக் கண்ட ஐஸ்வர்யா சத்தம் போட்டு கத்தி கூச்சலிட்டார்.

அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் திரண்டு வருவதற்குள் அனுசியாவை காருக்குள் அழைத்து சென்றதோடு தடுக்க முயன்றவர்களை கத்தியைக் காட்டி மிரட்டிவிட்டு காரில் தப்பி சென்றுவிட்டனர். அனுசுயா காரில் ஏறி நொடிப் பொழுதில் தப்பிச்செல்வதை அப்பகுதியை சேர்ந்த ஒருவர் வீடியோ எடுத்துள்ளார்.

மேலும் இந்த களேபரத்தில் அனுசியாவின் அக்கா மகளான மித்ராவின் காதுப்பகுதியில் இளைஞர்கள் எடுத்து வந்த கத்தி பட்டதில் காயம் ஏற்பட்டு ரத்தம் வெளிவந்தது. இதனால் குழந்தை மித்ரா கதறி அழும் காட்சிகளும், மின்னல் வேகத்தில் கார் கிராமத்தினுள் பறந்து செல்லும் காட்சிகளும் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உடனடியாக குழந்தை மித்ரா தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து அனுசியாவின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் கீழப்பழுவூர் போலீசார், விசாரணை செய்து தப்பிச் சென்றவர்களை தேடி வருகின்றனர்.

இதனிடையே அனுசியாவுக்கும், குமரேசனுக்கும் திருமணம் நடைபெற்றுவிட்டதாகவும், அவர்கள் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News