கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு 63 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
- மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 112.73 அடியாக இருந்தது.
- பாசனத்துக்கு வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
சேலம்:
கர்நாடகாவில் இந்தாண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கி பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள அணைகள் மற்றும் ஆறுகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.
தொடர்ந்து இடைவிடாமல் கொட்டிவரும் மழையின் காரணமாக 124.80 அடி உயரமுள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 120.90 அடியாக இருந்தது. இதே போல் கபினி அணையின் நீர்மட்டமும் அதிகரித்து வருகிறது. இதனால் இந்த 2 அணைகளில் இருந்தும் நேற்று தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. கபினி அணையில் இருந்து வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடியும், கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடியும் என மொத்தம் 42 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்த தண்ணீர் நேற்று மாலை முதல் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வரத்தொடங்கியது.
இதற்கிடையே கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதியான குடகு மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதையடுத்து கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 33 ஆயிரம் கனஅடியும், கபினி அணையில் இருந்து வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடியும் என மொத்தம் 63 ஆயிரம் கனஅடி தண்ணீர் தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.
இந்த தண்ணீர் தமிழகத்தை நோக்கி வந்து கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக கர்நாடகாவில் உள்ள காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் காவிரி நீர்பாசன அதிகாரிகள் மற்றும் பொதுப்பணித்துறையினர் கரையோர பகுதிகளை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 112.73 அடியாக இருந்தது. அணைக்கு நேற்று மாலை வினாடிக்கு 13,332 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று வினாடிக்கு 18,290 கனஅடியாக அதிகரித்து காணப்படுகிறது. தொடர்ந்து பாசனத்துக்கு வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 82.34 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
அணைக்கு வரும் தண்ணீரை விட அதிகளவில் பாசனத்துக்கு திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம்மெதுவாக குறைந்து வருகிறது. அதே நேரம் கர்நாடக அணைகளில் திறந்து விடப்பட்ட தண்ணீர் முழுமையாக வரத்தொடங்கினால் அணையின் நீர்மட்டம் உயரும்.