விஜய் மாநாட்டில் விஜயகாந்த் படம்- பிரேமலதா விளக்கம்
- வருகிற ஜனவரியில் கடலூர் மாவட்டத்தில் மாபெரும் மாநாடு நடைபெற இருக்கிறது.
- மாநாடு வெற்றி பெற தே.மு.தி.க. சார்பில் வாழ்த்துகள்.
திட்டக்குடி:
கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தில் தே.மு.தி.க. சார்பில் உள்ளம் தேடி இல்லம் நாடி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு பேசியதாவது:-
திட்டக்குடி, சிதம்பரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் தொகுதிகள் விஜயகாந்தின் கோட்டை. வருகிற சட்டமன்ற தேர்தலில் திட்டக்குடி தொகுதியை மீண்டும் முரசு சின்னம் வென்று சரித்திரம் படைக்கும்.
வருகிற ஜனவரியில் கடலூர் மாவட்டத்தில் மாபெரும் மாநாடு நடைபெற இருக்கிறது. விஜயகாந்த் வெற்றி பெற்ற முதல் தொகுதி விருத்தாசலம்.
அந்த தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். இந்த வெற்றி தொடரனும். திட்டக்குடி-விருத்தாசலம் தொகுதிக்கு இடையே உள்ள பகுதியில் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளோம்.
இது உலகமே திரும்பி பார்க்கும் மாநாடாக இருக்கும். 2011 வரலாற்று வெற்றியை மீண்டும் திரும்ப பெறுவாம் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சி முடிந்த பின் பிரேமலதா, அங்கு கூடியிருந்த பெண் தொண்டர்களுடன் கோலாட்டம் ஆடினார். பின்னர் பிரேமலதா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மதுரையில் இன்று நடக்கும் விஜய் மாநாட்டில் விஜயகாந்த் படம் வைத்தது பிரச்சனை இல்லை. ஆனால் அக்கட்சி சார்பில் அரசியலில் எங்களுக்கு விஜயகாந்த் தான் மானசீக குரு என தெரிவிக்க வேண்டும்.
மாநாடு வெற்றி பெற தே.மு.தி.க. சார்பில் வாழ்த்துகள்.
விருத்தாசலம் தொகுதியில் நான் போட்டியிடுவதாக இதுவரை முடிவு எடுக்கவில்லை.
திட்டக்குடி தொகுதியில் மாநாடு நடத்தி போட்டியிடுவது குறித்து தெரிவிப்பேன். 234 தொகுதிகளும் எங்களுக்கு சாதகமாகத் தான் உள்ளது. துரோகிகள் காலம் முடிந்து விட்டது. விசுவாசிகள் தான் உடன் இருக்கிறார்கள். கூட்டணி அமைந்த பிறகு எதுவாக இருந்தாலும் தெரிவிக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.