மக்கள் கருத்துக்கு ஏற்ப நுள்ளிவிளை மேம்பாலம் அமைக்க வேண்டும்: விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை
- ரெயில்வே பணிகளுக்காக நுள்ளிவிளையில் புதிய மேம்பாலம் அமைக்க ரெயில்வே நிர்வாகம் முன் வந்தது.
- தற்போதைய பாலத்தை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரி:
நுள்ளிவிளையில் புதிதாகக் கட்டப்படும் ரெயில்வே மேம்பால பணிகளுக்காக தற்பொழுது உபயோகத்தில் உள்ள பாலத்திற்கு பதில் புதிய பாலம் அமைப்பதை மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப திட்டமிட வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு விஜய் வசந்த் எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக விஜய் வசந்த் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
நாகர்கோவில்–திங்கள் நகர் ஆகிய ஊர்களை இணைக்கும் சாலையில் அமைந்துள்ளது நுள்ளிவிளை. ரெயில்வே இரட்டிப்பு பணிகளுக்காக இங்கு ஒரு புதிய ரயில்வே மேம்பாலத்தை அமைக்க ரயில்வே நிர்வாகம் முன் வந்தது.
அதை கட்ட தற்போது உபயோகத்தில் உள்ள மேம்பாலத்தை இடிக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் அன்றாட வாழ்க்கை பாதிக்கும் என பொதுமக்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
மக்கள் சார்பாக இன்று கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மாவட்ட ஆட்சியர் அழகு மீனாவை தொடர்பு கொண்டு இந்தப் பாலத்தை இடிக்கும் பணியினை மக்கள் கோரிக்கைக்கு ஏற்ப திட்டமிட வேண்டும்.
மக்களுக்கு எந்த சிரமமும் ஏற்படாத வகையில், மக்களின் கருத்திற்கு முக்கியத்துவம் அளித்து, அவர்களை சிரமத்திற்கு உள்ளாக்காமல், அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத வகையில் இந்தப் பாலத்தினை சீரமைப்பு செய்யும் பணியினை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், அந்தப் பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத வகையில் மாற்று ஏற்பாடுகளைச் செய்த பின்னரே இந்தப் பாலத்தின் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.