தமிழ்நாடு செய்திகள்
null

சேலத்தில் இருந்து மீண்டும் பிரசாரம் தொடங்க விஜய் திட்டம்

Published On 2025-11-20 12:44 IST   |   Update On 2025-11-20 12:48:00 IST
  • கரூரில் நடந்த பெரும் துயர சம்பவத்தில் இருந்து தலைவர் இன்னும் மீளாமல் இருக்கிறார்.
  • சேலத்தில் இருந்து மீண்டும் பிரசாரத்தை தொடங்குமாறு எங்களது விருப்பத்தை விஜய்யிடம் தெரிவித்தோம்.

சேலத்தில் இருந்து மீண்டும் பிரசாரத்தை தொடங்க விஜய் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கரூரில் பிரசாரம் செய்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதனால் விஜய் பிரசாரத்தை தற்காலிகமாக நிறுத்தினார்.

இதற்கிடையே சென்னையில் சமீபத்தில் நடந்த த.வெ.க. சிறப்பு பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் விஜய் கலந்து கொண்டு பேசும்போது, எனது அரசியல் பயணம் இன்னும் வேகமாக இருக்கும் என்றும், தி.மு.க. மீது கடும் விமர்சனத்தையும் முன்வைத்து பேசினார்.

அப்போது, கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், நாமக்கல் மற்றும் கரூரில் பிரசாரம் செய்துவிட்டதால் அருகில் உள்ள மாவட்டமான சேலத்தில் இருந்து மீண்டும் பிரசாரத்தை தொடங்குமாறு விஜய்யிடம் விருப்பம் மற்றும் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.

அதற்கு அவரும் சம்மதம் தெரிவித்ததாகவும் சொல்லப்படுகிறது. அதன்படி சேலத்தில் இருந்து விஜய் மீண்டும் பிரசாரத்தை தொடங்க உள்ளதாகவும், அதற்கான ஏற்பாடுகளில் கட்சி நிர்வாகிகள் ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து சேலம் மாவட்டத்தை சேர்ந்த த.வெ.க. நிர்வாகிகளிடம் கேட்டபோது, கரூரில் நடந்த பெரும் துயர சம்பவத்தில் இருந்து தலைவர் இன்னும் மீளாமல் இருக்கிறார்.

சென்னையில் நடந்த கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் சேலத்தில் இருந்து மீண்டும் பிரசாரத்தை தொடங்குமாறு எங்களது விருப்பத்தை விஜய்யிடம் தெரிவித்தோம். அதற்கு அவரும் சம்மதம் தெரிவித்தார். ஆனால் எப்போது பிரசாரத்தை தொடங்குவார் என்பதை கட்சி தலைமையும்,

பொதுச்செயலாளரும் முடிவு செய்வார்கள். கட்சி தலைமை அறிவித்தால் அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வோம்.

எந்த இடத்தில் பொதுக்கூட்டம் நடத்துவது? அதற்கான போலீஸ் அனுமதி, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாநில நிர்வாகிகள் சேலத்திற்கு வந்து ஆலோசனை வழங்குவார்கள். அதற்கான தகவலை எதிர்பார்த்து காத்திருக்கிறோம், என்றனர்.

இந்த நிலையில், சேலத்தில் விஜய் சுற்றுப்பயணத்திற்கு அனுமதி அளிக்கக் கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் த.வெ.க.-வினர் மனு அளித்துள்ளனர். காவல்துறை அனுமதியை பொறுத்து தேதியை இறுதி செய்ய விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் த.வெ.க. தலைவர் விஜய் மீண்டும் பிரசாரத்தை எப்போது தொடங்குவார் என்று அவரது கட்சி தொண்டர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

Tags:    

Similar News