தமிழ்நாடு செய்திகள்

'வெல்லும் தமிழ் பெண்கள்' வெற்றி கொண்டாட்டம்: முதலமைச்சர் தலைமையில் இன்று நடக்கிறது

Published On 2025-12-12 07:40 IST   |   Update On 2025-12-12 07:40:00 IST
  • விளையாட்டில் பெண்கள் முத்திரை பதிக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
  • மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலமாக வயதான பெண்கள் பயனடைந்து வருகின்றனர்.

சென்னை:

தமிழக அரசின் 'விடியல் பயணம்' திட்டத்தின் கீழ் சராசரியாக தினந்தோறும் 57 லட்சம் பெண்கள் பயணம் செய்கிறார்கள். இதன் மூலம் அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.888 போக்குவரத்து செலவு மிச்சமாகிறது என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை போன்று பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை தமிழக அரசு அறிமுகம் செய்து வருகிறது.

தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்கள் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த பெண்கள் சென்னை போன்ற பெருநகரங்களில் தங்கி பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றுகின்றனர். இவர்களுக்காக சமூக நலத்துறை சார்பில் குறைந்த வாடகையில் நவீன வசதிகளுடன் 'தோழி விடுதி' என்ற திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தியது.

சென்னை, ஓசூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, சேலம், தஞ்சாவூர், திருச்சி, நெல்லை, திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், தூத்துக்குடி ஆகிய இடங்களில் தோழி விடுதி இயங்கி வருகிறது. விளையாட்டிலும் பெண்கள் முத்திரை பதிக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதேபோன்று பெண்களின் முன்னேற்றத்துக்காக கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1,000 கல்வி ஊக்கத்தொகை வழங்கும் புதுமைப்பெண் திட்டம், சுய உதவிக்குழுக்களுக்கு நிதியுதவி, கடன் உதவி, பெண் தொழில் முனைவோர் திட்டம் போன்ற திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலமாக வயதான பெண்கள் பயனடைந்து வருகின்றனர்.

இந்தநிலையில் தமிழக அரசு பெண்களுக்காக செயல்படுத்தி வரும் திட்டங்களின் சாதனைகள், பயனடைந்த பெண்களின் அனுபவங்கள், தமிழ்நாட்டின் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் முக்கிய பெண் சாதனையாளர்களை ஒன்றிணைத்து, பெண்களின் முன்னேற்றத்துக்காக தமிழக அரசின் முன்னெடுப்புகளை எடுத்துக்காட்டும் வகையில் ' வெல்லும் தமிழ் பெண்கள்' என்ற பெயரில் தமிழ்நாட்டின் சாதனை பெண்களின் மாபெரும் வெற்றி கொண்டாட்ட நிகழ்வு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் 3 மணியளவில் நடைபெறுகிறது.

விழாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார்.

இதில் சமூக சேவகியான 'பத்மஸ்ரீ' விருது பெற்ற கிருஷ்ணம்மாள் ஜெகநாதன், 2022-ம் ஆண்டு சீனாவில் காங்சோவில் நடைபெற்ற மாற்றுத்திறனாளர் ஆசிய விளையாட்டு பூப்பந்து போட்டியில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்திய துளசிமதி முருகேசன் மற்றும் பல்வேறு துறைகளில் சாதித்த பெண்கள், முக்கிய பெண் பிரபலங்கள், அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

Tags:    

Similar News