7-வது நாளாக வேதாரண்யம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை: மீன் வர்த்தகம் பாதிப்பு
- கடலுக்கு செல்லாத மீனவர்கள் தங்களது பைபர் மற்றும் விசைப்படகுகளை கடற்கரை ஓரங்களில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.
- மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தி உள்ளது.
வேதாரண்யம்:
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும், பல்வேறு மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் உள்ள வெள்ளப் பள்ளம், புஷ்பவனம், ஆறுகாட்டுத்துறை, கோடியக்கரை உள்ளிட்ட கிராம மீனவர்கள் கடந்த 18-ந்தேதி முதல் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.
கடலுக்கு செல்லாத மீனவர்கள் தங்களது பைபர் மற்றும் விசைப்படகுகளை கடற்கரை ஓரங்களில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். நாளை (சனிக்கிழமை) புதிதாக காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு இருப்பதால் நாகை மாவட்ட மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தி உள்ளது.
இதனால் நாகை மீனவர்கள் இன்று 7-வது நாளாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. எப்போதும் பரபரப்பாக காணப்படும் கடற்கரை பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகிறது.
மேலும், விசைப்படகுகள் மற்றும் பைபர் படகுகளை கரையோர பகுதிகளில் மீனவர்கள் பத்திரமாக நிறுத்தி வைத்துள்ளனர். மீனவர்கள் 7 நாட்களாக கடலுக்கு செல்லாததால் சுமார் ரூ.50 லட்சம் மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது.