ராமதாசிடம் நலம் விசாரித்தார் வி.சி.க. தலைவர் திருமாவளவன்
- அப்பல்லோ ஆஸ்பத்திரியில் இருந்து டாக்டர் ராமதாஸ் நேற்று மாலை ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டார்.
- ராமதாஸ் முழுமையாக நலம்பெற வேண்டுமென விசிக சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.
இந்தநிலையில், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த டாக்டர் ராமதாசை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குனர் சேரன் உள்ளிட்டோர் நேற்றுமுன்தினம் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
மேலும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் நேற்று நேரில் சென்று உடல்நலம் விசாரித்தனர். இதற்கிடையில் டாக்டர் ராமதாஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் தகவல், இமயமலையில் ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ரஜினிகாந்திடம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ரஜினிகாந்த் உடனடியாக டாக்டர் ராமதாசை தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்தார்.
இதனை தொடர்ந்து, அப்பல்லோ ஆஸ்பத்திரியில் இருந்து டாக்டர் ராமதாஸ் நேற்று மாலை 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டார். அப்போது அவரிடம் நிருபர்கள், வீட்டில் ஓய்வெடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்களா? என கேள்வி எழுப்பினர். அதற்கு ராமதாஸ், "எனக்கு எப்போதும் ஓய்வே கிடையாது" என கூறிவிட்டு சென்றார்.
இந்த நிலையில், டாக்டர் ராமதாசை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
பாமக நிறுவனர் மருத்துவர் ச.இராமதாஸ் அவர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தேன். அவர் முழுமையாக நலம்பெற வேண்டுமென விசிக சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்தேன் என்று கூறியுள்ளார்.