துணை ஜனாதிபதி தேர்தல்: முதல்வர் ஸ்டாலினை இன்று சந்திக்கிறார் சுதர்சன் ரெட்டி
- துணை ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் 9-ம் தேதி நடைபெறுகிறது.
- பாராளுமன்றத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.
சென்னை:
துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் கடந்த மாதம் 21-ந் தேதி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார்.
தன்கர் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியது. அதன்படி, துணை ஜனாதிபதி தேர்தல் வரும் 9-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
பாராளுமன்றத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும், அதைத்தொடர்ந்து உடனே வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவு இன்றைய தினமே அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
துணை ஜனாதிபதி தேர்தலில் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சி கூட்டணியும் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. அதன்படி, காங்கிரஸ் இடம்பெற்றுள்ள இந்தியா கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக பி. சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். இரு வேட்பாளர்களின் வேட்புமனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இந்தியா கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி இன்று சந்திக்க உள்ளார்.
சென்னை தி.நகர் அக்கார்ட் ஓட்டலில் மாலை 5 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களை சந்திக்கும் சுதர்சன் ரெட்டி துணை ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு திரட்டுகிறார்.