போதையில் இருந்த VAO தலையில் கல்லை போட்டு கொன்ற திருநங்கைகள்- விசாரணையில் அம்பலம்
- முகம், தலையில் பலத்த காயங்களுடன் ராஜாராமன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
- ராஜாராமன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நாகை மாவட்டம் வாழைக்கரை பகுதியை சேர்ந்தவர் ராஜாராமன் (வயது 37). இவர் நாகை அடுத்த திருவாய்மூர் வி.ஏ.ஓ.வாக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி 1 ஆண் மகன் உள்ளார்.
கடந்த ஆண்டு எட்டுக்குடி ஊராட்சி வல்லம் வருவாய் வி.ஏ.ஓ.வாக ராஜாராமன் பணியாற்றியபோது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளிவந்தார். இருந்தாலும் சில மாதங்கள் ராஜாராமன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதன் பிறகு திருவாய்மூர் வி.ஏ.ஓ.வாக பணியை தொடர்ந்தார்.
இந்நிலையில் லஞ்சம் வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்காக நேற்று முன்தினம் ராஜாராமன் தனது மோட்டார் சைக்கிளில் நாகைக்கு சென்றார்.
பின்னர் அங்கிருந்து மாலையில் மோட்டார் சைக்கிளில் வாழைக்கரையில் உள்ள வீட்டுக்கு புறப்பட்டார்.
ஆனால் இரவு வெகுநேரமாகியும் அவர் வீட்டுக்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பல இடங்களில் ராஜாராமனை தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை நாகை செல்லூர் கிழக்கு கடற்கரை சாலையில் முகம், தலையில் பலத்த காயங்களுடன் ராஜாராமன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த வெளிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜாராமன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாராமனை யாரேனும் அடித்து கொலை செய்தனரா? அல்லது தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், ராஜாராமன் மரணத்திற்கு இரண்டு திருநங்கைகள் காரணம் என போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
அன்று இரவில் ராஜாராமன் தலையில் கல்லை போட்டு கொலை செய்த திருநங்கையர் நிவேதா, ஸ்ரீகவியை போலீசார் கைது செய்த மேற்கொண்டு விசாரணை நடத்தினர்.
இதில், ராஜாராமன் செல்லூரில் போதையில் படுத்திருந்தபோது பணம், செல்போன், மோதிரம் பறித்து கொண்டு அவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்துவிட்டு திருநங்கைகள் தப்பியது விசாரணையில் தெரியவந்துள்ளது.