தமிழ்நாடு செய்திகள்

மந்திரி பதவிக்காக மாற்று கூட்டணியுடன் பேசி வருகிறோமா?- கண்கலங்கி பேசிய வைகோ

Published On 2025-08-19 13:08 IST   |   Update On 2025-08-19 13:08:00 IST
  • 30 ஆண்டுகள் தி.மு.க.விற்காகவும், 31 ஆண்டுகள் ம.தி.மு.க.விற்காகவும் உழைத்துள்ளேன்.
  • துரை வைகோவுக்கு வாக்கெடுப்பு நடத்திய பிறகே கட்சியில் பொறுப்பு வழங்கப்பட்டது.

கோவை:

கோவை சூலூரில் ம.தி.மு.க சார்பில், இந்தி ஏகாதிபத்தியம் என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:-

இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கோவை மாவட்டத்தின் பங்கு மிக முக்கியமானது. கல்லூரி காலத்திலேயே இந்தி எதிர்ப்புக்காக களம் கண்டு சிறை சென்றவன் நான்.

30 ஆண்டுகள் தி.மு.க.விற்காகவும், 31 ஆண்டுகள் ம.தி.மு.க.விற்காகவும் உழைத்துள்ளேன். மீதி மூச்சு உள்ளவரை திராவிட முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பாடுபடுவேன். தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பது என்பது 8 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட முடிவு. அந்த முடிவில் தான் தொடர்ந்து பயணிக்கிறேன்.

உடல்நிலை சரியில்லாதபோது கலைஞரை நேரில் சென்று சந்தித்தேன். அப்போது, தி.மு.க.வில் உங்களுக்கு உறுதுணையாக இருந்தது போல, ஸ்டாலினுக்கும் பக்க பலமாக இருப்பேன் என்று கண்ணீர் மல்க கூறினேன். அதனை நான் தொடர்ந்து செய்வேன். இந்த நிகழ்வை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் குறிப்பிட்டுள்ளார்.

ஒருமுறை பாராளுமன்றத்தில் நான் பேசியபோது, எங்கள் வீரத்தை பார்க்க வேண்டும் என்றால் பாராளுமன்றத்தில் வைக்கப்பட்டுள்ள ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் ஆகியோர் அடங்கிய படத்தை பார்த்து விட்டு வாருங்கள் என கூறினேன். ஆனால் அதன் பிறகு அந்த படம் அங்கு இருந்தே அகற்றப்பட்டு விட்டது.

தமிழகத்தில் வந்து ராஜேந்திர சோழன் பற்றியும் ராஜராஜன் பற்றியும் பேசிவிட்டு செல்லும் பிரதமர் மோடி, மீண்டும் பாராளுமன்றத்தில் அந்தப் படத்தை வைக்க முடியுமா? என கேள்வி எழுப்பினார்.

பிரதமர் மோடி ஆர்.எஸ்.எஸ்சை தூக்கிப் பிடித்து பேசி வருகிறார். அம்பேத்கர் படத்தை பாராளுமன்றத்திற்கு கொண்டு வர அப்போதைய பிரதமர் வி.பி.சிங்கிடம் பேசி அதனை கொண்டு வந்தவன் நான்.

நாடாளுமன்றத்தில் என் குரல் ஒலிக்கவில்லை என்றாலும், தமிழகத்தின் தெருக்களிலும் மக்கள் மன்றத்திலும் தொடர்ந்து பாடுபடுவேன். ம.தி.மு.க.வுக்காக என் குடும்பத்திலிருந்து தாய், தம்பி என பலரை இழந்துள்ளேன். அவர்களை இதுவரை கட்சிக்காகவோ, பதவிக்காகவோ பயன்படுத்தவில்லை.

அமைச்சர் பதவிக்காக மாற்றுக் கூட்டணியில் பேசி வருவதாக கூறுகின்றனர். அப்படிப்பட்ட நோக்கம் ம.தி.மு.கவுக்கு இல்லை. அமைச்சர் பதவி கொடுத்தபோது அதை வேண்டாம் என்று மறுத்து கட்சி தொண்டர்களுக்கு அதை வாங்கி கொடுத்தவன் இந்த வைகோ.

துரை வைகோவுக்கு வாக்கெடுப்பு நடத்திய பிறகே கட்சியில் பொறுப்பு வழங்கப்பட்டது. அதற்கு முன்பு அதை எதிர்த்தவன் நான்.

கட்சியில் இருந்து வெளியே சென்று, கட்சிக்கு எதிராக துரோகம் செய்தவர்கள் குறித்து இதுவரை விமர்சனமோ, கருத்தோ நான் கூறவில்லை.

அவர்கள் எங்கிருந்தாலும் நன்றாக இருக்கட்டும், நன்றாக வாழுங்கள். உயிர் மூச்சு உள்ளவரை இந்த மக்களுக்காகவும், தமிழுக்காகவும், திராவிடத்துக்காகவும் பேசிக்கொண்டே இருப்பேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

கடைசியாக பேசியபோது வைகோ திடீரென கண்கலங்கினார். அவர் கண்கலங்கி பேசியதை பார்த்த கட்சியினரும் உணர்ச்சிவசப்பட்டனர்.

Tags:    

Similar News