காலிப்பணியிடங்கள் டூ 2026 தேர்வு உத்தேச அட்டவணை - TNPSC தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்புகள் வெளியீடு!
- குரூப் -4 பணிகளில் 645 காலிப்பணியிடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.
- 2026 குரூப் 4 தேர்வு அடுத்தாண்டு டிசம்பரில் நடைபெறுகிறது
2024, 25ஐ தொடர்ந்து 2026ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு உத்தேச அட்டவணையை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதன்விவரம் பின்வருமாறு;
- ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வு (நேர்காணல் அல்லாத பதவிகள்) - அறிவிக்கை வெளியிடப்படும் நாள் ; 20.5.2026 - தேர்வு நடைபெறும் நாள் ; 03.08.2026
- ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வு I (குரூப் I சேவைகள்) - அறிவிக்கை வெளியிடப்படும் நாள்; 23.06.2026 - தேர்வு நடைபெறும் நாள்; 06.09.2026
- ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தேர்வு (பட்டயம் / தொழிற்பயிற்சி தரம்) அறிவிக்கை வெளியிடப்படும் நாள்: 07.07.2026 -தேர்வு நடைபெறும் நாள்; 20.09.2026
- ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு II (தொகுதி II மற்றும் IIA பணிகள்): தேர்வு அறிவிக்கை நாள்; 11.08.2026-தேர்வு நடைபெறும் நாள்; 25.10.2026
- ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தேர்வு (நேர்முகத் தேர்வு பதவிகள்) - தேர்வு அறிவிக்கை நாள்- 31.08.2026 - தேர்வு நடைபெறும் நாள்; 14.11.2026
- ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – IV (குரூப் IV பணிகள்) - தேர்வு அறிவிக்கை நாள்- 06.10.2026- - தேர்வு நடைபெறும் நாள்; 20.12. 2026
மேலும் தேர்வர்கள் தங்களை தேர்வுக்கு தயார்படுத்தி கொள்ளவே இந்த ஆண்டுத்திட்டம் வெளியிடப்படுகிறது. ஆண்டுத் திட்டத்தில் தேர்வுகள் சேர்க்கவோ அல்லது நீக்கவோ செய்யப்படலாம். காலியிடங்கள் அறிவிக்கையில் வெளியிடப்படும். பாடத்திட்டம் மற்றும் தேர்வுத் திட்டம் ஆணையத்தின் வலைத்தளமான www.tnpsc.gov.in இல் வெளியிடப்பட்டுள்ளன. இவை அறிவிப்பு வெளியிடப்படும் தேதி வரை மாற்றங்களுக்கு உட்பட்டவை. அறிவிக்கை தொடர்பான விவரங்களுக்கு தேர்வாணைய இணையதளத்தினை தொடர்ந்து கவனித்து வரவும். எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை தொடர்ந்து இந்தாண்டுக்கான குரூப் -4 பணிகளில் 645 காலிப்பணியிடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;
"கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வனக்காப்பாளர், மற்றும் வனக்காவலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான 3935 காலிப்பணியிடங்களை நிரப்ப ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு தொகுதி IV பணிகளுக்கான அறிவிக்கை தேர்வாணையத்தால் 25.04.2025 அன்று வெளியிடப்பட்டது. கூடுதலாக 727 காலிப்பணியிடங்களுக்கான பிற்சேர்க்கை (26.09.2025) அன்று வெளியிடப்பட்டது. தற்போது மேலும் 645 காலிப்பணியிடங்களுக்கான பிற்சேர்க்கை இன்று (03.12.2025) வெளியிடப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்ட மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 5307 ஆகும்.
2025-ம் ஆண்டு ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு IV (தொகுதி IV பணிகள்) மூலம், கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிகளில் (வனக்காப்பாளர், மற்றும் வனக்காவலர் பதவிகள் நீங்கலாக), ஒரு நிதியாண்டிற்கு (2025. 26) 5101 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிக்கை மற்றும் பிற்சேர்க்கை வெளியிடப்பட்டுள்ளன. 2022 மற்றும் 2024 ஆண்டிற்கான அறிவிக்கைகளில் (வனக்காப்பாளர், மற்றும் வனக்காவலர் பதவிகள் நீங்கலாக) சராசரியாக ஒரு நிதியாண்டிற்கு நிரப்பப்பட்ட காலிப்பணியிடங்களுடன் (3560) ஒப்பிடும்போது, 2025-ம்ஆண்டில் கூடுதலாக 1541 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது." என தெரிவிக்கப்பட்டுள்ளது.