தமிழ்நாடு செய்திகள்

அமெரிக்கா வரி விதிப்பு எதிரொலி: தூத்துக்குடியில் கடல் உணவு நிறுவனங்களில் 50 சதவீத உற்பத்தி நிறுத்தம்

Published On 2025-08-28 13:10 IST   |   Update On 2025-08-28 13:10:00 IST
  • தமிழ்நாட்டில் உள்ள 25 கடல் உணவு ஏற்றுமதி நிறுவனங்களில் 15 நிறுவனங்கள் தூத்துக்குடியில் இருந்து இயங்குகின்றன.
  • கடந்த ஆண்டு மட்டும் இந்தியாவில் இருந்து ரூ.60 ஆயிரம் கோடி மதிப்பிலான மீன், இறால் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

தூத்துக்குடி:

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் மீண்டும் பொறுப்பேற்ற பிறகு பிற நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது கூடுதல் வரி விதித்து வருகிறார்.

அந்த வகையில் அமெரிக்காவில் இறக்குமதியாகும் இந்திய பொருட்கள் மீது முதலில் விதித்த 25 சதவீத வரி கடந்த 7-ந்தேதி அமலுக்கு வந்தது. இந்நிலையில் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை வாங்குவதால் இந்தியாவுக்கு கூடுதலாக 25 சதவீத வரியை அபராதமாக விதிப்பதாக மீண்டும் ஒரு அறிவிப்பு வெளியிட்டார்.

இந்த வரி நேற்று முதல் அமலாகியது. இவ்வாறு 50 சதவீத வரி விதிக்கப்பட்டதால் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ஜவுளி, ஆயத்த ஆடைகள், எந்திர தயாரிப்பு, கடல் உணவுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் கடல் உணவு பொருட்கள் இறக்குமதியில் இந்தியாவின் பங்கு 26.5 சதவீதமாக உள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து இறால், கணவாய், பனாமின் போன்ற கடல் உணவுகள் அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

தமிழ்நாட்டில் உள்ள 25 கடல் உணவு ஏற்றுமதி நிறுவனங்களில் 15 நிறுவனங்கள் தூத்துக்குடியில் இருந்து இயங்குகின்றன. இந்நிறுவனங்களில் இருந்து இறால், கணவாய், ஆக்டோபஸ், மீன் மற்றும் கடல் நண்டுகள் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

கடந்த ஆண்டு மட்டும் இந்தியாவில் இருந்து ரூ.60 ஆயிரம் கோடி மதிப்பிலான மீன், இறால் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதில் இறாலின் பங்கு 40 சதவீதம் ஆகும். தற்போது அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பால் கடல் உணவு ஏற்றுமதி 36 ஆயிரம் கோடியாக சரியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து மட்டும் சுமார் ரூ.3 ஆயிரம் கோடி அளவுக்கு அமெரிக்காவுக்கு கடல் உணவுகள் ஏற்றுமதி ஆகி இருந்தது. தற்போது கூடுதல் வரி விதிப்பால் இந்த ஏற்றுமதி பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் கடல் உணவு நிறுவனங்கள் உற்பத்தியை 50 சதவீதம் குறைத்துள்ளன.

இதுகுறித்து கடல் உணவு உற்பத்தி நிறுவன ஏற்றுமதியாளர்கள் கூறுகையில்,

வன்னாமி இறால்களில் 60 சதவீதம் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. மீதமுள்ளவை சீனா, ஜப்பான், கனடா மற்றும் ஐரோப்பாவுக்கு செல்கின்றன. தூத்துக்குடியில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் கடல் உணவுகள் அங்கு செல்ல 45 நாட்கள் ஆகும். வழக்கமாக ஒரு மாதத்திற்கு 50 கொள்கலன் கடல் உணவுகளை ஏற்றுமதி செய்யவும், இதில் பாதியளவு அமெரிக்காவுக்கு அனுப்பப்படும். தற்போது ஏற்றுமதி படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது என்றார்.

Tags:    

Similar News