அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது போலீசார் வழக்கு பதிவு
- அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
- சட்டமன்ற செயலாளர் சீனிவாசன் அளித்த புகாரின் பேரில் அமலாக்கத்துறையினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சென்னை:
தமிழக ஊரக வளர்ச்சி துறை அமைச்சராக இருந்து வருபவர் ஐ.பெரியசாமி. திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட ஐ.பெரியசாமி தி.மு.க. துணை பொதுச்செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார்.
தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவராக திகழும் இவர் ஏற்கனவே கூட்டுறவு துறை, வருவாய் துறை பொறுப்புகளையும் அமைச்சரவையில் வகித்து உள்ளார்.
இந்த நிலையில் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னை அடையாறு பசுமை வழிச்சாலையில் உள்ள ஐ.பெரியசாமியின் வீடு மற்றும் சேப்பாக்கம் எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் உள்ள அவரது அறை ஆகிய இடங்களுக்கு இன்று காலை 6 மணி அளவில் சென்னை அமலாக்கத்துறை அதிகாரிகள் 10 பேர் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
இதே போன்று திண்டுக்கல்லில் ஐ.பெரியசாமிக்கு சொந்தமான இடங்களிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், சென்னையில் சோதனை நடத்தி வரும் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
எம்.எல்.ஏ. விடுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாக சட்டமன்ற செயலாளர் சீனிவாசன் அளித்த புகாரின் பேரில் அமலாக்கத்துறையினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.