திருத்தணி அருகே அருங்குளம் கிராமத்தில் சீமான் தலைமையில் மரங்களின் மாநாடு தொடங்கியது
- மாநாட்டில் கட்சி நிர்வாகிகள், பொது மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- சுற்றுச்சூழல் உறுதிமொழியை வெளியிட்டார்.
திருத்தணி:
நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பில் மரங்களோடு பேசுவோம், மரங்களுக்காகப் பேசுவோம் என்ற தலைப்பில் திருத்தணி அருகே அருங்குளம் கிராமத்தில் மரங்களின் மாநாடு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. சமீபத்தில் மாநாடு நடைபெறும் இடத்தை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சென்று பார்வையிட்டார்.
இந்த நிலையில் அருங்குளம் கிராமத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் சீமான் தலைமையில் இன்று மரங்களின் மாநாடு நடந்தது. மாநாட்டில் கட்சி நிர்வாகிகள், பொது மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், நம்மாழ்வார், சுந்தர்லால் பகுகுணா, மிரா அல்பாசா, வங்காரி மாத்தாய், நடிகர் விவேக் ஆகியோர் படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அவர்களின் நினைவாக மரக்கன்றுகளை நட்டார்.
மேலும் சுற்றுச்சூழல் உறுதிமொழியை வெளியிட்டார். மாநாட்டு ஏற்பாடுகளை செய்தவர்களுக்கு புத்தகங்கள் கொடுத்து சீமான் பாராட்டினார். மரங்கள் தொடர்பான கவிதை புத்தகங்களை சீமான் வெளியிட்டார். பின்னர் மரங்களோடு பேசுவோம்; மரங்களுக்காக பேசுவோம் என்ற தலைப்பில் பேசினார்.