கோடை விடுமுறையையொட்டி ஏற்காட்டில் அலைமோதிய சுற்றுலா பயணிகள்
- ஆந்திரா போன்ற இடங்களிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
- போக்குவரத்து நெரிசலை சமாளிக்க ஏற்காடு போக்குவரத்து போலீசார் 30-க்கும் மேற்பட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்காடு:
சேலம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலமான ஏற்காட்டில் கோடை சீசன் களைகட்ட தொடங்கியுள்ளது. வருகின்ற 23-ந் தேதி கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி தொடங்க உள்ள நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்துள்ளனர்.
பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படும் நிலையில் நேற்று இரவு ஏற்காட்டில் நல்ல மழை பெய்து சீதோசன நிலை மிகவும் குளுமையாக மாறி உள்ளது. இந்த சீதோசன நிலையை அனுபவிக்க தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற இடங்களிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
ஏற்காடு வந்துள்ள இவர்கள் இங்குள்ள முக்கிய சுற்றுலா இடங்களான அண்ணா பூங்கா, ஏரி பூங்கா, ரோஜா தோட்டம், ஐந்திணை பூங்கா, பக்கோடா பாயிண்ட் லேடீ ஸ் சீட் உள்ளிட்ட இடங்களை கண்டு ரசித்தனர்.
குறிப்பாக படகு இல்லத்தில் குவிந்துள்ள சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து இயற்கை காட்சிகளை ரசித்தவாறு படகு பயணம் செய்தனர். ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் அதிக அளவில் வந்ததால் மலைப்பாதையிலும் மற்றும் அண்ணா பூங்கா சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசலை சமாளிக்க ஏற்காடு போக்குவரத்து போலீசார் 30-க்கும் மேற்பட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.