ஊட்டியில் ரோஜா கண்காட்சியை காண 2-வது நாளாக அலைமோதிய சுற்றுலாபயணிகள்
- மலர் கண்காட்சி உள்பட பல்வேறு கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
- விடுமுறை தினம் என்பதால் அதிகாலையிலேயே சுற்றுலாபயணிகள் குவிந்தனர்.
ஊட்டி:
கோடை காலத்தை முன்னிட்டு ஊட்டியில் குவியும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் ஆண்டுதோறும் மே மாதத்தில் அரசு சார்பில் கோடை விழா நடத்தப்பட்டு மலர் கண்காட்சி உள்பட பல்வேறு கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒரு கட்டமாக ஊட்டி ரோஜா பூங்காவில் 20-வது ரோஜா கண்காட்சி நேற்று தொடங்கியது. கண்காட்சியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு அலங்காரங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. 80 ஆயிரம் பல வண்ண ரோஜா மலர்களை கொண்டு இரு டால்பின்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் பல ஆயிரம் ரோஜா மலர்களை கொண்டு சிப்பி, நத்தை, மீன், பென்குயின், கடல் குதிரை, நீலத்திமிங்கலம், ஸ்நைல், கடல் கன்னி, நட்சத்திர மீன் உள்பட பல்வேறு வடிவங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
இதுதவிர வெளி மாவட்டங்களைச் சேர்ந்த தோட்டக்கலைத்துறையினர் 10-க்கும் மேற்பட்ட குடில்களில் பல வகையான மலர் அலங்காரங்களை செய்து வைத்துள்ளனர். மேலும் 40 வகையான 4 ஆயிரம் ரோஜா செடிகளில் பலவண்ண மலர்கள் பூத்துக்குலுங்குகின்றன.
கண்காட்சியை காண நேற்று ஏராளமான சுற்றுலாபயணிகள் திரண்டனர். இன்று 2-வது நாளாக கண்காட்சி நடந்தது. இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் அதிகாலையிலேயே சுற்றுலாபயணிகள் குவிந்தனர். அவர்கள் அங்கு பூத்து குலுங்கிய ரோஜா பூக்களை பார்த்து ரசித்தனர்.
ரோஜாக்களால் செய்யப்பட்ட மலர் அலங்காரங்கள் முன்பு நின்று அவர்கள் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். ரோஜா கண்காட்சி நாளை வரை நடக்கிறது. கண்காட்சிக்கு சுமார் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட ரோஜாக்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளதாகவும், சுற்றுலா பயணிகள் அதனை விரும்பி ரசித்து செல்வதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.