18 நாட்கள் தடைக்கு பிறகு கொடிவேரி தடுப்பணையில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி
- மழைப்பொழிவு இல்லாததாலும் வெள்ளப்பெருக்கு வடிந்ததாலும் கொடிவேரி தடுப்பணைக்கு நீர் வரத்து குறைந்தது.
- கடந்த இரண்டு நாட்களாக சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது.
கோபி:
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தளமாக கோபி அருகே உள்ள கொடிவேரி தடுப்பணை ஆகும். ஈரோடு மட்டுமின்றி கோவை, சேலம், திருச்செங்கோடு, நாமக்கல் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக் கான சுற்றுலாப் பயணிகள் கொடிவேரி தடுப்பணைக்கு வருவது வழக்கம்.
தடுப்பணையில் குளித்து மகிழ்ந்து அங்கிருக்கும் பூங்கா பகுதியில் குடும்பத்தினருடன் உற்சாகமாக பொழுதை கழிப்பார்கள். மேலும் அணையின் வெளிப்பகுதியில் விற்கப்படும் பொரித்த மீன் புகழ்பெற்றதாகும்.
இந்நிலையில் பலத்த மழை காரணமாக பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் எதிரொலியாக கடந்த அக்டோபர் மாதம் 18-ந்தேதி முதல் சுற்றுலாப் பயணிகள் கொடிவேரி அணையில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து இரு கரைகளிலும் தொட்டபடி வெள்ள நீர் ஆர்ப்பரித்து சென்றதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தொடர்ந்து தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்து வந்தனர்.
இந்நிலையில் மழைப்பொழிவு இல்லாததாலும் வெள்ளப்பெருக்கு வடிந்ததாலும் கொடிவேரி தடுப்பணைக்கு நீர் வரத்து குறைந்தது. எனினும் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அருவியில் குளிக்கும் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் பிடித்து நிற்க வசதியாக பதிக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்புகள் சேதம் அடைந்திருந்தது.
இதனால் கடந்த இரண்டு நாட்களாக சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. சேதமடைந்த தடுப்புகளை ஊழியர்கள் சீர் செய்தனர். சீரமைக்கும் பணிகள் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது.
இதைத்தொடர்ந்து இன்று காலை முதல் மீண்டும் கொடிவேரி தடுப்பணையில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 18 நாட்கள் தடைக்கு பிறகு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப் பட்டதால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகம் அடைந்து உள்ளனர்.