கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு - கொடைக்கானலில் 2-வது நாளாக சுற்றுலா இடங்கள் மூடல்
- காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் நட்சத்திர ஏரியில் படகு சவாரி நிறுத்தப்பட்டது.
- பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கொடைக்கானல்:
திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு ள்ளது.
கொடைக்கானலில் கடும் குளிருடன் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் நேற்று வனப்பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களான தூண்பாறை, மோயர்பாய்ண்ட், குணாகுகை, பைன்பாரஸ்ட், பேரிஜம் ஏரி உள்ளிட்ட இடங்கள் மூடப்பட்டன. இன்று ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை என்ற போதும் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவாகவே இருந்தது.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் பாதுகாப்பு கருதி இன்று 2-வது நாளாக சுற்றுலா தலங்கள் மூடப்படுவதாக வனத்துறையினர் அறிவித்தனர்.
மேலும் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் நட்சத்திர ஏரியில் படகு சவாரி நிறுத்தப்பட்டது.
மற்ற சுற்றுலா தலங்களான பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, கோக்கர்ஸ் வாக் உள்ளிட்ட பகுதிகளிலும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் குறைவாகவே இருந்தது.
பொதுமக்களும் வெளியே நடமாடுவதை தவிர்த்ததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. இதேபோல் தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணை, கும்பக்கரை அருவி, சுருளி அருவி ஆகியவற்றிலும் சுற்றுலாப் பயணிகள் செல்லாததால் வெறிச்சோடி காணப்பட்டது.
ஆண்டிபட்டி பகுதியில் பெய்த கனமழையால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதில் சக்கம்பட்டியை சேர்ந்த மணி (வயது60) என்பவர் நடந்து சென்றபோது தவறி கால்வாயில் விழுந்து பலியானார். இன்று காலை அவ்வழியாக சென்றவர்கள் அதை பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று காலை சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர். இதே போல் வருசநாடு மலைப்பகுதியில் அமைந்துள்ள மேகமலை அருவியிலும் வெள்ளப்பெருக்கு மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக தடை விதிக்கப்பட்டுள்ளது. கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் நீர்வரத்து சீராக உள்ளதால் அனுமதிக்கப்பட்ட போதும் குறைந்த அளவே சுற்றுலாப் பயணிகள் வந்தனர்.