தமிழகத்தில் 3 மாதத்தில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிகம் பெய்தது
- அதிகபட்சமாக நெல்லையில் 333 மி.மீ. மழை கூடுதலாக பெய்துள்ளது.
- தென்மேற்கு பருவமழை காலம் செப்டம்பர் மாதம் வரை உள்ளது.
சென்னை:
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை பெய்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
ஜம்மு-காஷ்மீர், உத்தரகாண்ட், இமாச்சலபிரதேசத்தில் மேக வெடிப்பு காரணமாக வெள்ளம் நிலச்சரிவு ஏற்பட்டன. இதனால் கடுமையான உயிர் சேதமும், பொருள் சேதமும் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் வடமாநிலங்களில் செப்டம்பர் மாதம் இயல்பை விட அதிக மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜூன், ஜூலை, ஆகஸ்டு ஆகிய 3 மாதத்தில் இயல்பை விட கூடுதலாக மழை பெய்துள்ளது.
வடகிழக்கு, கிழக்கு இந்தியாவின் சில பகுதிகள், கடைக்கோடி தென்தீபக்கற்ப பகுதிகளை தவிர்த்து நாடு முழுவதும் பரலாக அதிக மழைப்பொழிவு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுஉள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை 209.7 மில்லி மீட்டர் பெய்ய வேண்டும். ஆனால் 214 மி.மீ. மழை பெய்துள்ளது. இது இயல்பை விட 6 மில்லி மீட்டர் அதிகமாகும். மொத்தம் உள்ள 38 மாவட்டங்களில் 19 மாவட்டங்களில் சராசரி மழை அளவை விட கூடுதலாக பெய்துள்ளது.
அதிகபட்சமாக நெல்லையில் 333 மி.மீ. மழை கூடுதலாக பெய்துள்ளது. தென்காசியில் 88 மி.மீ., கோவை 52 மி.மீ. மயிலாடுதுறை 49 மி.மீ. திருவள்ளூர் 44 மி.மீ., தேனி 41 மி.மீ., ராணிப்பேட்டை 40 மி.மீ., சென்னையில் 23 மி.மீ. கூடுதலாக மழை பெய்துள்ளது.
தென்மேற்கு பருவமழை காலம் செப்டம்பர் மாதம் வரை உள்ளது. ஆனால் கடந்த 3 மாதங்களில் தமிழகத்தின் 38 மாவட்டங்களில் 19 மாவட்டங்களில் இயல்பைவிட மழை குறைவாக பெய்துள்ளது. இந்த மாதம் பரவலாக மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய கூடும். சென்னையில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.